மனித வெடிகுண்டு பயங்கரவாதி கைது!

கேரளாவில் மனித வெடிகுண்டு பயங்கரவாதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 21-ந்தேதி தேசிய தவ்ஹீத் ஜமாத் பங்கரவாதிகள் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இதே போன்று மீண்டும் ஒரு தற்கொலை தாக்குதலை நடத்த இலங்கையில் சிலர் முயற்சி செய்வதாக நேற்று பரபரப்பு தகவல் வெளியானது. ராணுவ உடையில் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையில் நாசவேலை செய்த பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் உள்ளவர்களுடன் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் தொடர்பில் உள்ளனர் என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) கண்டு பிடித்தது.

இதைத் தொடர்ந்து இலங்கையில் மனித வெடிகுண்டு தாகக்குதல் நடத்தியவர்களுக்கு, தமிழ்நாடு, கேரளாவில் உள்ள யாரேனும் உதவி செய்தார்களா? என்ற விசாரணை நடந்தது. அப்போது இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு வந்து சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து இந்தியா முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. தென் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் தலைவனாக செயல்பட்ட ஜக்ரான் ஹசீம் கொழும்பில் நட்சத்திர ஓட்டலில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவன்தான் தமிழகத்திலும், கேரளாவிலும் பலருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஆதரித்து இவன் பேசும் உணர்ச்சிமயமான பேச்சுகள், கேட்பவர்களை மனித வெடி குண்டாக மாற்றும் சக்தி படைத்தவை.

அத்தகைய அவனது பேச்சை கோவையிலும், கேரளாவிலும் பலர் இணையத்தளம் மற்றும் பெண் டிரைவ் மூலம் பார்த்து இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவனும், காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், அகமது அராபத் ஆகியோரும் ஜக்ரான் ஹசீம் பேச்சை கேட்டு பயங்கரவாதிகளாக மாறி இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பின் தொடர் கண்காணிப்பு மூலம் தெரிய வந்தது.

ரியாஸ் அபுபக்கர், அபுபக்கர் சித்திக், அகமது அராபாத் மூவரும் ஜக்ரான் ஹசீமுக்கு உதவிகள் செய்து இருப்பார்கள் என்ற சந்தேகம் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு வலுத்தது. இதனால் பாலக்காடு, காசர் கோட்டில் உள்ள அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பிறகு மூன்று பேரும் கொச்சியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டனர்.

அப்போது பாலக்காடு ரியாஸ், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் மிக, மிக நெருங்கிய தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிரியாவில் உள்ள முக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் அவன் ஆன்லைன் மூலம் தினமும் பேசி வந்ததும் தெரிய வந்தது.

தலைமறைவு பயங்கரவாதிகளான அப்துல் ரஷீத், அப்துல்லா, அப்துல் கயாம் ஆகியோருடனும் ரியாஸ் அடிக்கடி பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவனை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

29 வயதான ரியாஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதி ஜக்ரான் ஹசீம் பேச்சுக்களை கேட்டு வந்ததாகவும், அந்த பேச்சின் அடிப்படையில் கேரளாவில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் உள்ள முக்கிய நகரில் அவன் தற்கொலை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்ததை ஒப்புக் கொண்டான்.

அவனிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் மேலும் சிலர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாம்.

அந்த தகவல்களின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தி அந்த பயங்கரவாதிகளையும் வேட்டையாட தேசிய புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக் கர் சித்திக், அகமது அராபத் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இலங்கை பயங்கரவாதிகளுக்கு கேரளா வழியாக உதவிகள் சென்றதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

-athirvu.in

TAGS: