பெங்களுரு: மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடந்த 20ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியள்ள பகுதியின் குடிநீருக்காகவும், மின்சார உற்பதிக்காகவும் அணை அவசியம் என கர்நாடகா அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் புதிய அணைக்கான வரைபடத்துடன், அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக எல்லையை ஒட்டிய மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியில் இப்போது வரும் தண்ணீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் போகும் தமிழகம் அச்சப்படுகிறது. இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலே நடுநிலை வகிப்பதாக கூறி மத்திய அரசு காவிரி விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை.
இதனால் காவிரி விவகாரம் இருமாநிலங்களிலும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. காவிரி நீர் திறப்பு தொடர்பான காவிரி ஒழுங்காற்கு குழுவீன் உத்தரவை இருமாநில அரசுகளும் ஏற்க வேண்டிய நிலையில் உள்ளன.
மேகதாதுவில் அணை
இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடகா அரசு கடந்த 20ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், 2011ம் ஆண்டு கணக்குப்படி சுமார் 61 லட்சம் மக்கள் தொகை உள்ள பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவையையும், சுற்றியுள்ள பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்வதற்ககாகவும் மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
கர்நாடகாவின் மின் தேவை
இந்த திட்டத்தின் மூலம் 400 மெகாவாட் நீர் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். கர்நாடகாவில் காவிரியும் கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இருந்த போதிலும் கர்நாடகா மாநிலத்தில் வறட்சியும், மின்சார பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
கூடுதல் தண்ணீர் சேமிப்பு
எனவே மின் பற்றாக்குறை மற்றும் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கர்நாடகா அரசு, தமிழக எல்லைப்பகுதியை ஒட்டிய மேகதாது அருகே அணை கட்ட முடிவு செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீர் போக கூடுதல் தண்ணீரை இந்த அணை மூலம் சேமித்து கர்நாடகாவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
5252.400 ஹெக்டர் நிலம்
மேலும் இதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யும் மின்திட்டமும் உள்ளது. இந்த மேகதாது அணை திட்டத்தின் மதிப்பீடு ரூ.9 ஆயிரம் கோடியாகும். மேகதாது அணைக்காக மொத்தம் 5252.400 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. 4996 ஹெக்டேர் நிலம் அணையில் நீர் தேக்கவும், 256.40 ஹெக்டர் நிலம் பிற கட்டுமானங்களுக்கும் என தேவைப்படுகிறது.
காவிரி வனப்பகுதி நிலம்
இதில் 3181.9 ஹெக்டேர் நிலம் காவிரி வனப்பகுதியிலும், 1869.5 ஹெக்டேர் ரிசர்வ் வனப்பகுதியிலும், 201 ஹெக்டேர் ரெவின்யூ பகுதியிலும் வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க வேண்டும் ” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.