இராகவன் கருப்பையா – பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் அவ்விருமுறையும் தைப்பூசத்திற்கு சில நாள்களுக்கு முன்னாடியே அன்வார் அங்கு சென்றாரேத் தவிர தைப்பூசத்தினத்தன்று அல்ல.
பிரதமர் பதவியேற்று சுமார் இரண்டரை மாதங்களில், அதாவது 2023ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.
எனினும் அதற்கு அடுத்த ஆண்டு தைப்பூசத்தன்று அன்வார் பத்துமலைக்கு வருகையளிப்பார் என அறிவிக்கப்பட்டது. கோயில் நிர்வாகத்தினரும் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு அந்த வருகை ரத்து செய்யப்பட்டது.
பிறகு கடந்த ஆண்டின் தைப்பூசத் திருநாளுக்கான அழைப்பை ஏற்ற அன்வார், 4 நாள்களுக்கு முன்னாடியே அங்குச் சென்றது நிறைய பேர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
தைப்பூசம் 11/2/25ஆம் தேதியன்று கொண்டாடப்படவிருந்த வேளையில் 7/2/25ஆம் தேதி வெள்ளிக்கிழமையே பத்துமலைக்குச் சென்ற அவர் அங்குள்ள மண்டபத்தில் சுமார் அரைமணி நேரம் அரசியல்வாதிகளுடனும் கோயில் நிர்வாகத்தினருடனும் அளவளாவினார்.
இவ்வாண்டும் அதே போன்றதொரு நிலைதான். தைப்பூசம் ஃபெப்ரவரி ஒன்றாம் தேதி. ஆனால் கடந்த 30ஆம் தேதி வெள்ளிக்கிழமையே அன்வார் அங்குச் சென்றார்.
இப்படிப்பட்டச் சூழலில், பிரதமர் எனும் வகையில் தைப்பூசத்தன்று பத்து மலைக்கு வருகை மேற்கொள்வதை ஏன் அன்வார் தவிர்த்து வருகிறார் எனும் கேள்வி எழுந்துள்ளது.
அரசியல்வாதிகளுடனும் கோயில் நிர்வாகத்தினருடனும் மட்டுமே அமர்ந்து சிற்றுண்டிச் சாப்பிட்டுவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.
கடந்த ஆண்டும் இவ்வாண்டும் ஒரே மாதிரியானக் காரணங்கள்தான் முன் வைக்கப்பட்டன. அதாவது தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்வதற்குதான் அன்வார் பத்துமலைக்குச் சென்றார் என அறிவிக்கப்பட்டது.இது சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் கண்காணிப்பில்தான் திருவிழாக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன? எனும் கேள்வி எழுகிறது.
மற்ற இனத்தவரின் சமய விழாக்களில் முஸ்லிம்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என தீவிரவாத மலாய்க்காரர்கள் பிரச்சாரம் செய்து வருவது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.
இத்தகைய நெருக்குதல்களுக்கும் அன்வாரின் போக்கிற்கும் சம்பந்தமிருக்கக் கூடும் என நம் சமூகம் ஐயப்பாடு கொள்வதிலும் நியாயம் உள்ளது.
கடந்த 1959ஆம் ஆண்டில் நமது முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் 1971ஆம் ஆண்டில் 2ஆவது பிரதமர் துன் ரஸாக்கும் பத்துமலை தைப்பூச விழாக்களில் கலந்து கொண்டதாகத் தரவுகள் காட்டுகின்றன.
அந்த காலக்கட்டத்தில் தீவிரவாத சமய நெருக்குதல்கள் அவ்வளவாக இல்லை, அந்த சூழலில் 6ஆவது பிரதமர் நஜிப் பல தடவை தைப்பூசத் திருவிழாக்களில் கலந்து கொண்டதை நாம் இங்கு நினைவுக்கூரத்தான் வேண்டும்.
பாஸ் கட்சியின் அரசியல் ஆளுமையை குறைக்க வேண்டுமானால், அன்வார் இஸ்லாத்தின் மீதான அவரின் அரசியல் ஆளுமை சற்றும் குறைய வில்லை என்ற நிலைப்பாட்டை காட்ட வேண்டும். அதோடு போதுமான அளவுக்கு அம்னோவின் நிலையை சீராக்க வேண்டும்.

























