இராகவன் கருப்பையா – ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்நாட்டை ஆட்சி செய்த தேசிய முன்னணியை முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கடந்த 2018ஆம் ஆண்டில் வீழ்த்தி சாதனை புரிந்த போது பெரும்பகுதி மக்கள் குதூகலமடைந்து கொண்டாடினார்கள்.
யாரும் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு ஊழல் மிதமிஞ்சிப் போயிருந்த அந்த காலக்கட்டத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்ததைப் போல சில்sls மேகா ஊழல்வாதிகள் சிறையிலடைக்கப்பட்டது இந்நாட்டுக்கு ஒரு பொற்காலம் என்று கூட சொல்லலாம்.
ஆனால் சுமார் எட்டே ஆண்டுகளில் அவை அனைத்தும் தலைகீழாக மாறி மீண்டும் நம் நாடு ‘பழைய குருடி கதவை திறடி’ எனும் நிலைக்குத் திரும்பிவிடுமோ எனும் அச்சம் நாட்டு மக்களிடையே தற்பொழுது நிலவுகிறது.
மிகவும் லாவகமாக பாஸ் கட்சியுடன் கைக் கோர்த்த தேசிய முன்னணி, நடந்து முடிந்த ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான், ஆகிய இரு மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.
அடுத்து நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலையும் சந்திப்பதற்கு உற்சாகமாகக் காத்திருக்கும் அக்கூட்டணி, அதனைத் தொடர்ந்து 16ஆவது பொதுத் தேர்தலை முடுக்கிவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் நஜிப் உள்பட அம்னோவைச் சேர்ந்த பல ஊழல்வாதிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் மேலும் பலர் இன்னும் தண்டிக்கப்படவில்லை. சிலருடைய வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன என்பதும் நாம் அறிந்ததே.
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் எவ்விதமான தண்டனையிலிருந்தும் தப்பிக்கலாம் எனும் நம்பிக்கை இந்நாட்டு அரசியல்வாதிகள் நிறைய பேருக்குக் காலங்காலமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை.
இந்நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி, சுயமாக நாட்டை வழிநடத்தத் திட்டமிட்டிருக்கும் தேசிய முன்னணியின் எண்ணம் நிறைவேறும் தறுவாயில் உள்ளது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க, 2 தவணைகள் பிரதமர் பதவியை அலங்கரிக்கும் வாய்ப்பு பிரதமர் அன்வாருக்குக் கிடைக்காமல் போய்விடும் என்றே தெரிகிறது. அப்படியானச் சுழல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு நழுவிக் கொண்டிருப்பதை நாம்மால் காணமுடிகிறது.
புத்ரா ஜெயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கான தேசிய முன்னணியின் உத்வேகமும் சுயநலமும் ஒரு புறமிருக்க, அன்வாரின் கவனக் குறைவும் அலட்சியமும் கூட அதற்கு வித்திட்டது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக இந்நாட்டு இந்திய சமூகத்தினரின் மனங்களை அவர் நிறையவே காயப்படுத்தியுள்ளார்.
இந்துக்களுக்கு, குறிப்பாக நகர்ப்புறங்களுக்கு அப்பால் உள்ளவர்களுக்கு, வழிபாட்டுத் தலங்கள் ஆண்டாண்டுகாலமாக வாழ்க்கையோடு ஒன்றித்த ஒரு அம்சமாகும்.
எத்தகைய சூழ்நிலைகளில் அந்தக் கோயில்கள் கட்டப்பட்டன என்று நன்கு தெரிந்திருந்தும் அவற்றை ‘கோயில் ஹராம்'(சட்ட விரோதக் கோயில்) என அவப்பெயரிட்டு, அவற்றை தகர்த்தெரிய வேண்டும் என்று மூர்க்கத்தனமாக உத்தரவிட்டது இந்துக்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தினரின் மனங்களையும் பாதித்துவிட்டது.
அதற்காக கடந்த வாரம் இந்திய சமூகத்தினரிடம் அவர் மன்னிப்புக் கோரிய போதிலும், அது காலங் கடந்த ஒன்றாகக் கருதி நிறைய பேர் அதனை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் சுமார் 130 ஆண்டுகளாக வீற்றிருந்த தேவி ஸ்ரீ
பத்ரகாளியம்மன் கோயிலை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த உத்தரவிட்டு, அதனை ‘இஸ்லாத்திற்கு கிடைத்த வெற்றி’ என்று அவர் ஒரு போதும் குறிப்பிட்டிருக்கக் கூடாது.
பிரிதொரு நிகழ்வில் தமிழ் மொழியை ‘பஹாசா கெல்லிங்'(Bahasa Keling) என இழிச்சொல்லால் அவர் குறிப்பிட்டதையும் நிறைய போர் மறந்திருக்கமாட்டார்கள். பிரதமர் எனும் வகையில் மிகவும் கவனமாக அவர் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
இத்தகையச் செயல்கள் எல்லாமே பக்காத்தான் ஹராப்பானுக்கான நம் சமூகத்தினரின் ஆதரவை சன்னம் சன்னமாக கரைத்துவருகிறது.
அதே போல சீனப் பள்ளிகளின் உயர்கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பன்றிப் பண்ணகள் தொடர்பான விஷயங்களிலும் அதிருப்தி கொண்டுள்ள சீன சமூகத்தினரின் ஆதரவையும் பக்காத்தான் ஹராப்பான் கணிசமான அளவு இழந்துள்ளது.
இவற்றையெல்லாம் கடந்து அடுத்த பொதுத் தேர்தலில் அன்வாரின் நிலை என்னவாக இருக்கும் என்று நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
























