“தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர் (கருணாநிதி), இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார். தன்மானம் உள்ளவர்கள், இலங்கை தமிழர்கள் பற்றி பேசலாம்; மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது,” என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்த, அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
“இலங்கைத் தமிழர்கள், தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு சமமாக வாழ வழி வகை செய்ய வேண்டுமென, சட்டசபையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன். இலங்கை இராணுவத்துக்கு, தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை, இந்திய மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில், இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன். இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களும், தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர். எனினும், இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மிகப் பயணம் போன்றவற்றுக்காக, தமிழகத்துக்கு வரும் சிங்களர்களுக்கு, எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில், அரசு உறுதியுடன் செயல்படுகிறது.”
“ஆனால், தன்னலம் காரணமாக, தன்மானத்தை இழந்து, இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக, குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆதரவாக இந்திய மத்திய அரசு செயல்பட்டது.”
“தமிழக மீனவர்கள், தங்களது பாரம்பரிய இடங்களில், மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில், அவர்கள் மீது, இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர் இலங்கைத் தமிழர்களுக்காக என கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றி விட்டார். இப்படி தமிழர் மானத்தை காப்பாற்றுபவர் தான் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார். தன்மானம் பெரிது என்று வாழ்பவன் தான் தமிழன். தன்மானம் உள்ளவர்கள், இலங்கைத் தமிழர்கள் பற்றி பேசலாம்; மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள், என் நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும்.” இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.