ஈழப் பிரச்னையில் ஐநா மன்றத்தில் இந்தியா தீர்மானம் தேவை: திமுக

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் அவை தேவையான முன்முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை அவ்வவையில் இந்திய மத்திய அரசு முன்மொழியவேண்டும் எனத் கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு கோரியிருக்கிறது.

திமுக தலைவர் மு கருணாநிதி தலைமையில் நேற்று புதன்கிழமை சென்னையில் கூடிய டெசோ கூட்டத்தில், அத்தகைய பன்னாட்டுத் தலையீட்டின் வழியாகத்தான் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கமுடியும், அவர்கள் தங்களுடைய உரிமைகளை விவாதித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இயலும் எனக் கூறும் தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா அவை மற்றும் ஐநா மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிடம் கையளிக்க திமுக பொருளாளர் மு.க..ஸ்டாலின், மற்றும் கட்சியின் நாடாளுமன்ற அணித்தலைவர் டி.ஆர் பாலு ஆகியோர் ஜெனிவா செல்வார்கள் என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாலுவும் சட்டமன்ற உறுப்பினராய் இருக்கும் ஸ்டாலினும் ஐ.நா.வை அணுக இந்திய மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி பெறப்பட்டுவிட்டதாகக் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினார்.

போருக்குப் பிறகு இலங்கை அரசு அங்கே அமைதியை உருவாக்கும் என்ற நம்பிக்கையோ, எதிர்பார்ப்போ உங்களுக்கு இருந்ததா என செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்கள் அங்கேயுள்ள தமிழர்களை அமைதியாக வாழ விடுவார்கள் என்ற நம்பிக்கை என்றைக்கும் இருந்ததில்லை. அதனால் தான் அந்தக் காலத்திலிருந்து தமிழர்கள் சுதந்திர வாழ்வு, அமைதியான வாழ்வு வாழ அவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளக் கூடிய உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்று இன்று நேற்றல்ல, செல்வநாயகம் அவர்கள் காலத்திலிருந்து இலங்கையிலே போர்க் குரல் அமைதியாகவும், அகிம்சை வடிவிலும், ஆயுதமின்றியும் நடந்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது என்றார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இந்திய அரசின் விருந்தினராக வரவேற்கப்பட்டது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, “அப்படி செய்வது தவிர்க்கவியலாதது” என்றார்.