சென்னையில் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

மிகக்கடுமையான மின்வெட்டுக் காரணமாக, தமிழகம் முழுவதும் 16 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படும் நிலையில், சென்னையில் தற்போது அமல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாக அதிகரிக்க மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டின் மின் தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி உயர்ந்துள்ள காரணத்தால், சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் பிற பகுதிகளில் பரவலாக மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளதாக அரசு கூறியுள்ளது.

தற்போது சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு மணி நேர மின் தடையை இரண்டு மணி நேரமாக உயர்த்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நாளை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சென்னைக்கும் பிற மாவட்டங்களுக்கும் இடையே பெரும் பாரபட்சம் காட்டப்படுவதாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டமும் நடத்தப்படுகின்றன. ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

தொழில் மற்றும் வேளாண் துறையில் முன்னிலை வகிக்கும் கோவை மாவட்டத்தில் 14 முதல் 16 மணி நேரம் வரை மின்தடை அமலில் உள்ள நிலையில், அங்கு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கவும், மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரம் வாங்கவும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று தொழில் அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விடயத்தில், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட தொழில் அமைப்புக்கள் வரும் 27-ம் தேதி முழு கடை அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

TAGS: