புதுடெல்லி: வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை குறைக்க வேண்டும், மடிக் கணினி வாங்கக்கூடாது, அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சகங்களுக்கு இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம், அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பட்டியலிட்டு, அவற்றை பின்பற்றுமாறு கூறியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், மத்திய நிதி அமைச்சகம் கூறி இருப்பதாவது:-
நாடு கடினமான பொருளாதார சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறது. அந்த சுமையை அனைத்து அமைச்சகங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். செலவைக் குறைக்கும் வகையில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களை குறைத்து கொள்ள வேண்டும். மடிக் கணினி வாங்கக்கூடாது. அதிகாரிகளை இடமாற்றம் செய்தால், அவர்களுக்கு பயணப்படி, பொருட்களை எடுத்துச் செல்வதற்கான படி ஆகியவற்றை வழங்குவதன் மூலம் செலவுகள் ஏற்படும். எனவே, அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சகங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கான செலவுகள் உள்பட இதர அனைத்து செலவுகளையும் அமைச்சகங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.