கூடங்குளம் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள 40 கிராமங்களிலும், `மாக் ட்ரில்’ எனப்படும் ஆபத்துக் கால தற்காப்புப் பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பாக, இதுவரை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, மேலும் எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆபத்துக் கால தற்காப்புப் பயிற்சிகள் ஒரு கிராமத்தில் மட்டுமே நடத்தப்பட்டிருப்பதாக, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், இரண்டு கிராமங்களுக்கு சேர்த்து ஒரே இடத்தில் பயிற்சி நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், அதை ஏற்க மறுத்தது. கூடங்குளம் அணு உலையைச் சுற்றி 16 கி.மீ. சுற்றளவில் உள்ள 40 கிராமங்களிலும் இதுபோன்ற பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், அணு உலை செயல்படத் துவங்குவதற்கு முன்னதாக அந்தப் பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அத்தகைய பயிற்சிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பொதுமக்கள் பாதுகாப்பைப் பொருத்தவரை, எந்த சமரசமும் செய்ய முடியாது என்றும், அதுதொடர்பாக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள், இனி எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

TAGS: