மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப், இன்று புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார்.

பாகிஸ்தான் பிரஜையான, கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் மறுத்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

புதன்கிழமை காலை 7.30 மணிக்கு, புனே நகரில் உள்ள ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது முழுவதும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் மும்பையின் நட்சத்திர ஹோட்டல்கள், ரயில் நிலையம், மற்றும் யூத கலாசார மையம் உள்ளிட்டவற்றின் மீது நடத்திய 60 மணி நேரத் தாக்குதலில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டார்கள். அதில் தீவிரவாதிகள் 9 பேரும் கொல்லப்பட்டார்கள்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில், கஸாப்பும் அவரது கூட்டாளியும் நடத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டார்கள. அப்போது கஸாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார்.

அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் அவருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்தது.

சிறையிலேயே அடக்கம்

தூக்கிலிடப்பட்ட கஸாப்பின் உடல் அந்த சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் செளஹான் தெரிவித்தார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் வைக்கப்பட்டிருந்த கஸாப், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் புனே சிறைக்கு மாற்றப்பட்டார்.

கஸாப்பின் விருப்பப்படி, அவர் தூக்கிலிடப்படுவது குறித்து பாகிஸ்தானில் உள்ள அவரது தாயாருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கஸாப்பின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 7-ம் தேதியன்று கஸாப்பைத் தூக்கிலிடுவதற்கான உத்தரவில் தான் கையெழுத்திட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

மிகவும் முக்கியமானது என்பதால் இந்த விடயத்தை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருந்தது என்று ஷிண்டே தெரிவித்தார்.

மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொயிபா இயக்கம்தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.

மும்பை தாக்குதல் தொடர்பாக தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என முதலில் மறுத்த பாகிஸ்தான், அந்தத் தாக்குதலின் ஒரு பகுதி பாகிஸ்தான் மண்ணில் திட்டமிடப்பட்டது என்பதையும், கஸாப் பாகிஸ்தானிய பிரஜை என்பதையும் பின்னர் ஒப்புக்கொண்டது.

இந் நிலையில், கஸாப் தூக்கிலிடப்படுவது குறித்த தகவலை முறைப்படி பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்க முயன்ற போதிலும் அதுபற்றிய தகவல்களை அது ஏற்க மறுத்துவிட்டது. அதையடுத்து, கூரியர் மூலமும், பின்னர் ஃபேக்ஸ் மூலமும் பாகிஸ்தான் தூதரகம் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளி மாணவியைக் கற்பழித்துக் கொலை செய்ததாக, கடந்த 2004-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட பிறகு, இப்போதுதான் அடுத்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2008-ல் தாக்குதல் நடத்தியபோது, கஸாப்பின் வயது 21. குறைந்த கல்வியறிவே கொண்ட கஸாப், தனது இளமைப் பருவத்தில் கூலித் தொழிலில் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். மும்பை தாக்குதலில் ஈடுபடுத்தப்படுவதற்காக, தனியாக ஒரு முகாமில் அவருக்கு லஷ்கர்-இ-தொயிபா அமைப்பினால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

-BBC

TAGS: