திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான விரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை காலை சென்னையில் காலமானார்.
சேலம் மாவட்ட திமுக செயலரான விரபாண்டி ஆறுமுகம், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
கடந்த 1937-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்த வீரபாண்டி ஆறுமுகம், 1957-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958 முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாயத்து ஒன்றிய தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.
1962 முதல் 2011 வரை 6 முறை எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 முதல் 84 வரை 2 முறை மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் தோல்வியடைந்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. வழக்குகளில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பூலாவரியில் நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.