தமிழகத்தின் ஆலங்குளம் அருகே காமராஜர் சிலை அவமதிப்பு: பதட்டம்

நெல்லை: ஆலங்குளம் அருகே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் சிலையை அவமதிப்பு செய்தது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது சோலைசேரி கிராமம். அங்கு நேற்று காமராஜர் சிலையில் யாரோ சாணம் வீசி அவமதித்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சிலை அவமதிப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிலை அவமதிப்பு குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஊத்துமலையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து ஒரு பிரிவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊத்துமலை வழியாகச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

சிலை அவமதிப்பை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமுமாக உள்ளது. இதையடுத்து அங்கு ஏராளனமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TAGS: