தமிழகத்திற்கு நள்ளிரவில் தண்ணீர் திறப்பு : கர்நாடகம் முழுவதும் பதற்றம்

உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை‌ தொடர்ந்து நள்ளிரவில் கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. இதையடுத்து கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு கர்நாடாவில் விவசாயிகள், மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டு‌ விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுப்பு தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நள்ளிரவு கர்நாடகாவின் கிருஷ்ணராஜா சாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று இரவு விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அவருடன் கர்நாடக மாநில சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், துணை முதல்வர் ஈஸ்வரப்பா, பா.ஜ. மாநில தலைவர் சீத்தராமைய உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

முன்னதாக நள்ளிரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள், கட்சிகள் மற்றும் கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

நேற்று மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையை சுற்றி 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று முழு அடைப்பு என்பதால் முன்னெச்சரிக்கையாக மாண்டியா உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டியா மாவட்டம் முழுவதும் பதற்றம் காணப்படுகிறது. இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டில்லியில் நடக்கவுள்ளதால் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

TAGS: