இந்திய சிறைகளில் 477 தூக்கு தண்டனை கைதிகள்

indian_govermentஇந்திய சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 477 பேர் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் அரசு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.

பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், மிகவும் அரிதாகவே இந்த தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட துப்பாகிதாரியான, அஜ்மல் கசாப் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி புனாவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

அதற்கு முன்பு 2004 இல் வங்கத்தில் ஒருவரும் 1995 இல் தமிழகத்தில் ஆட்டோ சங்கரும் தூக்கிலிடப்பட்டனர். மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 174 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். தென் மாநிலமாகிய கர்நாடகாவில் 61 பேர் மரணதண்டனை பெற்றுள்ளனர்.

மராத்திய மாநிலத்தில் 50 பேரும், பிகாரில் 37 பேரும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் பலமாக எழுந்து வருகின்றன. உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நிலையில் இந்தியா இது போன்ற தண்டனைகளைத் தொடர்ந்து நிறைவேற்றக் கூடாது என்று செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.

சமீபத்தில் ஐநா வில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை.

அதேசமயம், இந்தியாவில் மரணதண்டனை அறவே ஒழிக்கப்படவேண்டும் என்று குரல்கொடுத்துவரும் கவிஞரும் மரணதண்டனை எதிர்ப்பாளருமான இன்குலாப், இந்தியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளில் முறையான விசாரணைகளின் அடிப்படையிலோ, முழுமையான உண்மைகளின் அடிப்படையிலோ இத்தகைய மரணதண்டனைகள் விதிக்கப்படவில்லை என்கிறார். அந்த பின்னணியில், மரணதண்டனைகள் ஒழிக்கப்படுவதே நியாயமான செயல் என்கிறார் அவர்.

TAGS: