நடிகை கரீனா கபூரின் 8 நிமிட நடனத்திற்கு சம்பளம் 1.40 கோடி

kareena kapoorராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில பிறந்த நாள் விழாவில், 8 நிமிட நடன நிகழ்ச்சிக்காக, பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 1.40 கோடி இந்திய ரூபாய் கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து, 2000 ஆண்டில், தனியாக பிரித்து உருவாக்கப்பட்டது சத்தீஸ்கர் மாநிலம். வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள், அதிகமுள்ள மாநிலம். பழங்குடியின மக்கள் நிறைந்த இந்த மாநிலத்தில், பாரதிய ஜனதாவை சேர்ந்த, ராமன் சிங் முதல்வராக உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், 1ம் தேதி, மாநிலம் உருவாக்கப்பட்டதன் ஆண்டு விழா நடத்தப்படுவது வழக்கம். ‘ராஜ்யோத்சவம்’ என்ற இதற்கான நிகழ்ச்சி, இந்த ஆண்டில், கடந்த மாதம், 1ம் தேதி முதல், 7ம் தேதி வரை, தலைநகர், ராய்ப்பூரில் விமரிசையாக நடந்தது. அதில், பாலிவுட் நடிகர், நடிகைகள் நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது.

பாலிவுட் படவுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், சயீப் அலி கான் என்ற, ஏற்கனவே திருமணம் ஆகி, 16 வயதில் குழந்தைகள் உள்ள நடிகரை, 5 ஆண்டுகளாக காதலித்து, சமீபத்தில் மணந்து கொண்டவருமான நடிகை கரீனா கபூரும் பங்கேற்றார்.

அவருடைய நடன நிகழ்ச்சி, மொத்தமே, 8 நிமிடங்கள் தான் நடந்தது. அதற்காக, அவருக்கு, ஏராளமான பணம் கொடுக்கப்பட்டதாக அப்போதே பேசப்பட்டது. மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ், கலைநிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என மாநில பொதுப்பணி துறை அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வாலிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்து, சட்டசபையில் நேற்று, அமைச்சர், பிரிஜ்மோகன் அகர்வால் வெளியிட்ட பதிலில் கூறியுள்ளதாவது: ஒரு வாரம் நடந்த கலைநிகழ்ச்சிகளில், 245 கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களில், 42 பேர் பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். கலை நிகழ்ச்சிக்காக, மொத்தம் 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு அதிகபட்சமாக 1.40 கோடி ரூபாய் கௌரவ ஊதியமாக வழங்கப்பட்டது.

நடிகர் சோனு நிகாமுக்கு, 36 லட்ச ரூபாய், பாடகி, சுனிதி சவுகானுக்கு, 32 லட்ச ரூபாய், நடிகை, தியா மிர்சாவுக்கு 25 லட்ச ரூபாய், நடிகர், ஹிமேஷ் ரெஷாமியாவுக்கு, 24 லட்ச ரூபாய், பாடகர், பங்கஜ் உதாசுக்கு, 90 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிக்காக, நடிகர், நடிகைகளை அழைத்து வந்த விதத்தில் 54 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது; அவர்களின் தங்குமிடம், சாப்பாடு போன்றவற்றிற்காக 11 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது. இவ்வாறு, அமைச்சர் அகர்வால் பட்டியல் வாசித்தார்.

“தினமும், 100 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காத ஏழை மக்கள் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆண்டுதோறும், அரசு கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் பணத்தை இப்படி கரியாக்கலாமா…’ என, நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“அன்றாடம் காய்ச்சிகளாக, 90 சதவீத மக்களைக் கொண்டுள்ள மாநிலத்தில் 8 நிமிட நடனத்திற்கு 1.40 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ள நடிகை கரீனா கபூருக்குத் தான் வெட்கம் இல்லை; அதைக் கொடுத்த மாநில அரசுக்கு புத்தி எங்கே போயிற்று…’ என பொதுமக்களும் கொதிப்படைந்துள்ளனர்.

TAGS: