இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள தில்லி பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிருக்குப் போராடிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூளையில் பெரிய காயத்துடனும் நுரையீரல் மற்றும் வயிற்றில் கிருமித் தொற்றுப் பாதிப்புடனுமாக இந்தப் பெண்ணின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என சிங்கப்பூரில் இவருக்கு சிகிச்சை வழங்கிவரும் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையிலேயே இவர் தொடர்ந்தும் இருந்துவருகிறார். இந்தப் பெண் மீதான தாக்குதல் இந்தியாவில் அலையலையாக வன்முறை மிக்க ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியிருந்தது.
பாலியல் வல்லுறவுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.
23 வயது மருத்துவ மாணவியான இப்பெண்ணை, ஒரு பேருந்தில் வைத்து பலர் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்ததோடு, இரும்புத் தடியால் தாக்கி, வாகனத்திலிருந்து வெளியில் தூக்கியெறிந்தும் இருந்தனர்.