விடுதலை வேண்டி செங்கல்பட்டு சிறப்பு முகாம் தமிழர்கள் தொடர் பட்டினிப் போராட்டம்

IMG_20121228_131947கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 23 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் நிலை மோசமான காரணத்தால் அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்கின்றனர். மீதமுள்ளவர்கள் சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணா நிலையில் உள்ளனர். தமிழக அரசும் போராட்டத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

போராட்டம் தொடங்கிய பின் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ  நெடுமாறன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா ஆகியோர் மருத்துவமனை சென்று சிகிச்சையில் உள்ள  சிறப்பு முகாம் வாசிகளை சந்தித்துள்ளனர். அதன் பின்பு அரசும் சற்று தங்கள் நிலையை தளர்த்தி ஐந்து ஈழத் தமிழர்களை விடுதலை செய்த சம்மதித்துள்ளது. இதன்படி செல்வம், செல்வராஜா, ரமேஷ், ஜெயபாலன், ரைசுதீன் ஆகியோர்கள் விடுதலை ஆகிறார்கள்.

இவர்களை அரசு விடுதலை செய்தாலும் உண்ணா நிலையில் உள்ளவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. காரணம்; சென்ற காலங்களில் அரசு  45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து நபர்களை விடுதலை செய்து வந்தது . இப்போது 90 நாட்கள் ஆகியும் யாரையும்  விடுதலை செய்யவில்லை என்பதால்தான் முகாம்வாசிகள் போராட்டாம் நடத்தினார்கள். அரசு தற்போது 90 நாட்கள் கழித்து ஐந்து பேர்களை விடுதலை செய்வதை ஏற்க முடியாது,  10 பேர்களையாவது தற்போது விடுதலை செய்ய வேண்டும் எனவும் வருங்காலத்தில் வழமை போலவே 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து பேர்களை விடுதலை செய்ய அரசு உறுதி அளிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் கூறியுள்ளனர்.

மேலும் உலகத் தமிழர்களுக்கு முகாம் வாசிகள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது , தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் விடுதலை அடைய உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அந்தந்த நாடுகளின் இந்திய தூதரகங்களில் தங்கள் கண்டன அறிக்கையை சமர்பிப்பதுடன், பல வகையான போராட்ட முன்னெடுப்புகளை எடுக்குமாறு வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.

TAGS: