சென்னை : கமலை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் ஆதரவாக பேட்டி அளித்தும், பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டும் வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினிகாந்த், கி.வீரமணி உள்ளிட்ட சிலர் கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவும் கமலுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண குடிமகனை, கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.
தொலைக்காட்சியில் நொண்டிச்சாக்காக சிலர் சொல்கிறார்கள். படத்தில் பாட்டு இல்லை. காதல் காட்சிகள் இல்லை. காமெடி இல்லை. இது ஒரு ஆவணப்படமென்று சொல்கிறார்கள் படம் பார்த்தவர்கள். தொழில் நுட்பத்திலும் கதை சொல்லும் விதத்திலும் உலக தரத்திற்கு எடுக்கப்பட்ட ஒரு படத்தால் உயர்ந்து நிற்கிறான் இந்த தமிழன் என்று சக கலைஞனாக பெருமைபட்டு வந்தவன் நான்.
ஒரு ஆவணப் படத்திற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து படமெடுக்க யாராவது முனைவார்களா என்ன?
உலகில் நடந்த நிகழ்வுகளை பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை வாழ்க்கையில் அனுபவித்ததை ஒரு சமூக வலியோடு பூதகமாக திரையில் சொல்லுவது ஒரு படைப்பாளியின் தார்மீகமான படைப்பு சுதந்திரம்.
தயவு செய்து சகோதரர்களே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தங்களை தவறாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று தங்களை பணிவோடு, பண்போடும் பாசத்தோடும் கேட்டுக் கொள்கிறேன். யார் எந்த அடையாளங்களை கொண்டிருந்தாலும் இந்த மண்ணில் உள்ளவரை அவன் இந்தியனே.
ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை தமிழ் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒருசில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.
என் இனிய தமிழ் மக்களே!
நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள். சிந்தித்து பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கைகொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலைநிமிர்ந்து நிற்போம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.