வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த நீதிமன்றம் மறுப்பு

veerappan_friendsவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து இன்றே அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப்பகுதி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனுவை ஜனாதிபதி சமீபத்தில் நிராகரித்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கசாப், அப்சல் குரு ஆகியோரைப் போல இவர்களும் ரகசியமாக தூக்கில் போடப்பட்டு விடுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நால்வரையும் காப்பாற்ற அவர்களது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி சந்தீப் நாராயணன் என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதை நேற்று முன்தினம் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. அப்போது வாதாடிய வழக்கறிஞர் நாராயணன், இவர்களின் தூக்கு தண்டனையை திங்கட்கிழமை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதால், இதை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கும்படி கோரினார். ஆனால் 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பதற்கான முகாந்திரம் எதுவுமில்லை.

தூக்கிலிடும் தேதி முடிவு செய்யப்படாத நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து நால்வரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் இன்று பெங்களூரில் உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி ககந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது தூக்கிலிடுவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

இதனிடையே, மகாத்மா காந்தி பிறந்த தேசத்தில் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தாலும் கூட அதை அரசு நிறைவேற்றக் கூடாது. இனிமேல் யாருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றாதீர்கள் என்று ஜனாதிபதியையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கிறேன் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.

TAGS: