போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடலூர் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 44 ) என்பவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 8.45 மணி அளவில் உயிரிழந்தார்.
கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு சமூக ஆர்வலரான மணி தீக்குளித்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அங்கிருந்தோர் தீயை அணைத்து மிகவும் ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் 100 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இரவு சுமார் 9 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் கதறித் துடித்தனர்.
“இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என தீக்குளித்த நபர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீக்குளித்து சாவினை தழுவிய தோழர் மணி முன்னாள் இந்திய இராணுவ வீரரும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளருமாவார்.