இந்தியாவை இலங்கை மறைமுகமாக மிரட்டுகிறது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

jayalalithaஇலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த அட்டூழியங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை இலங்கை அரசு மறைமுகமாக மிரட்டுகிறது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஆகியோர் கடந்த 2ஆம் திகதி விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் கடந்த 6ஆம் திகதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந் தபோது, அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், காரைக்காலைச் சேர்ந்த செண்பகம் என்ற மீனவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மற்ற மீனவர்கள் காப்பாற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது கவலையளிக்கிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த தாக்குதல்களின் மூலம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த இலங்கை கடற்படை விரும்புகிறது.

இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த அட்டூழியங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை இலங்கை அரசு மறைமுகமாக மிரட்டுவதாகவே பார்க்க வேண்டும். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எனவே, இந்த விஷயத்தில் இந்தியா மௌனமாக இருக்கக்கூடாது. பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடாது என்று இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

TAGS: