சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் பற்றி எரிந்து வருகிறது. இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை, தமிழீழம் அமைப்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர்.
இம்மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்களின் ஆதரவு வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலையிலேயே மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இருப்பினும் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் லயலோ கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள், காரைக்குடி அழகப்பா கல்லூரி, ஆனந்தா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், மன்னார்குடி என ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றனர்.