டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை!

accused Ram Singhடில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டபேருந்து சாரதி ராம் சிங், திகார் சிறையில் இன்று (11) அதிகாலை 5 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டிசம்பர் 16ம் திகதி‌ ஓடும் பேருந்தில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பின்னர் மாணவியும், அவரது நண்பரும் இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டு ஓடும் பேருந்தில் இருந்து வீசி எறியப்பட்டனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவி சுமார் 15 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் டிசம்பர் 29ம் திகதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தியாவை உலுக்கிய இந்த கொடூர சம்பவ தொடர்பாக பேருந்து சாரதி ராம் சிங் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷை தாகூர் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து டில்லி திகார் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சாரதி ராம்சிங் இன்று அதிகாலை 5 மணிக்கு சிறை எண் 3ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது உடல் சவப் பரிசோதனைக்காக டில்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராம்சிங், ஜனவரி 4ம் திகதி இதே போன்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இருப்பினும் சக கைதிகள் அவரை காப்பாற்றி உள்ளதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS: