தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள பயண முகவர் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இச் சலுகையின் மூலம் வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் இதேபோல் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும் ரூ20 கோடி (இந்திய ரூபா) மதிப்பிலான வெளிநாட்டு காரும் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இதனைக் கருத்தில் கொண்டே தற்போது சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரிசெலுத்தப்படவில்லையெனவும் இதனடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதியின் புதல்வர் ஸ்டாலின் வீடு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை இச் சோதனை நடவடிக்கையானது இலங்கைத் தமிழர் விவகாரத்தால் மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறி சில நாட்களிலேயே நடைபெற்றுள்ளமையால் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நோக்கப்படுகின்றது.
இது முற்றிலும் அரசியல் பழிவாங்கள் நடவடிக்கையெனவும், இதற்கு சட்டரீதியாக முகங்கொடுப்போம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. வின் எம்.கே. அழகிரி, எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,எஸ். காந்தி செல்வன், எஸ். ஜகத்ரக்சகன், மற்றும் டி.நெப்போலியன் ஆகியோர் இந்திய மத்திய அமைச்சரவையிலிருந்து தற்போது வெளியேறியுள்ளனர்.
இதேவேளை தற்போது பிணையில் விடுதலையாகி இருப்பவரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவருமான கனிமொழி மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. வின் அதிரடி முடிவிற்கான எதிர் நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசாங்கம் தொடங்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.