மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.
சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.
ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு’ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்’ என முழக்கமிட்டனர்.
குழந்தைகள் ஒருங்கினைப்பாளர் சிறுவன் ‘தோழன் தமிழமுதன்’ நம்மிடம் பேசியபோது, “எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?
நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்” என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.
கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்தி கழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.
-நக்கீரன்