இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடத் தடை

Jayalalithaa_pointing_fingerசென்னை: “இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்’ என, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, “சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்’ என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால், இலங்கை கால்பந்து வீரர்கள், சென்னையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டனர். இலங்கை பங்கேற்கும், ஆசிய தடகள போட்டியை, சென்னையில் நடத்த முடியாது எனவும், அறிவிக்கப்பட்டது.

“இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் போட்டியில், இந்தியா பங்கேற்கக் கூடாது’ என, பிரதமர் மன்மோகனுக்கு, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் துவங்கும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: சென்னையில், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, மே, 26ம் தேதி வரை, ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல்., அணிகளில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை நடத்திய இன படுகொலையால், தமிழக மக்கள், பெரும் மன வருத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். போர் குற்ற ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டும் வருகின்றன.

இலங்கையின், காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு, இவை சாட்சிகளாக உள்ளன. இலங்கையின், அத்துமீறல்களைக் கண்டித்து, ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள், தமிழகத்தில் நடந்து வருகின்றன. தமிழக மாணவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைக்கு எதிராக, தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பொதுமக்கள் மத்தியில், இலங்கைக்கு எதிரான மனநிலை வலுப்பெற்றுள்ளது.

இந்த, நெருக்கடியான சூழலில், இலங்கை வீரர்களை கொண்ட, ஐ.பி.எல்., அணிகள் பங்கேற்கும் போட்டிகள், சென்னையில் நடப்பது, போராட்டங்களை தீவிரப்படுத்தும்.

எனவே, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள் கொண்ட ஐ.பி.எல்., அணிகளை அனுமதிக்க வேண்டாம் என, ஐ.பி.எல்., அணி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இலங்கை வீரர்கள் கொண்ட அணியை சென்னையில் விளையாட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கடிதத்தில், ஜெயலலிதா கூறியுள்ளார்.

TAGS: