தமிழகத் தீர்மானம் ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அல்ல : இந்திய அரசு

salman_khurshid_indian_foreign_ministerஇலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தின் தீர்மானத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைப்பாடாக கருதமுடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையிலும், அங்கு தொடர்ந்தும் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை அறிவித்து நடத்திவருகின்ற நிலையிலும் மத்திய அரசு இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

சீஎன்என்- ஐபிஎன் செய்திச் சேவையில் நடந்த நேரடி அரசியல் சம்பாஷனை நிகழ்ச்சியிலேயே சல்மான் குர்ஷித் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை நாட்டின் ஏனைய மாநிலங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

‘தமிழ்நாட்டில் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு நிலைமை இருக்கிறது என்பதை என்பதையும் நாங்கள் கவனத்தில் எடுக்கிறோம்’ என்று அவர் கூறினார்.

ஒரு மாநிலத்தின் உணர்வுகள் குறித்து கரிசனையில் எடுக்க முடியுமே தவிர, அவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையை நட்பு நாடல்ல என்று அறிவிப்பதற்கும், இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவருவதற்கும் தனி ஈழத்துக்காக இலங்கையில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஐநாவை கோருவதற்கும் இந்திய அரசு முன்வரவேண்டும் என்று தமிழக அரசு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.

நாடு முழுவதிலுமுள்ள மற்ற சட்டமன்றங்களும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை எடுத்தால் நிலைமை வேறுவிடயம் என்றும் சல்மான் குர்ஷித் கூறினார்.

TAGS: