காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்க சொன்னார் : ஜெயலலிதா

jayaசென்னை: காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை நேற்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார்.

சட்டசபையில் அவர் நேற்று பேசுகையில், நேற்றுமுன்தினம் உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட வேண்டுமென்று கூறினார் என்று சொன்னார். அப்போது உறுப்பினர் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் குறுக்கிட்டு, மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை என்றார். கூடவே, விஜயதாரணியும் ‘ஆமாம் மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை’ என்றார். வேறு சில உறுப்பினர்கள் அப்போது குறுக்கிட்டு இது வரலாறு, வரலாற்று உண்மை என்றார்கள்.

அப்போது உறுப்பினர்கள் பிரின்சும், விஜயதாரணியும் மகாத்மா காந்தி இப்படி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்கள். ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரத்தை கையிலே வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று நான் பேசாமல் இருந்தேன்.

மகாத்மா காந்தி 30.1.1948 அன்று கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது 29.1.1948 அன்று காங்கிரஸ் கட்சிக்கான ஒரு வரைவு சட்டத் திட்ட விதிகளை எழுதி அவர் அனுப்பினார்.

இது மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, 7.2.1948 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆச்சார்யா ஜூகல் கிஷோர் என்பவரால் வெளியிடப்பட்டது. “The Collected Works of Mahatma Gandhi – Volume 90” என்ற புத்தகம் இதோ இருக்கிறது (அந்தப் புத்தகத்தைக் காட்டினார்).

இந்த நூல் மத்திய அரசின் Ministry of Information and Broadcasting உடைய Publication Division ஆல் 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்திற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அன்னாள் பாரதப் பிரதமருமான அன்னை இந்திரா காந்தி அவர்களே முன்னுரை எழுதி இருக்கிறார்.

மகாத்மா காந்தி எழுதிய காங்கிரஸ் கட்சிக்கான சட்ட திட்ட விதிகளில் Draft Constitutionல் என்ன சொல்லி இருக்கிறார்?. ஆங்கிலத்தில் தான் எழுதி இருக்கிறார். அதாவது அதற்கு தலைப்பு ‘Draft Constitution of Congress’. “Though split into two, India having attained political independence through means devised by the Indian National Congress, the Congress in its present shape and form, i.e. as a propaganda vehicle and parliamentary machine, has outlived its use.” அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம்?.

காங்கிரஸ் காலாவதியாகிவிட்டது என்று மகாத்மா காந்தி அவர்களே எழுதி இருக்கிறார். மேலும் மகாத்மா காந்தி எழுதி இருக்கிறார். “India has still to attain social, moral and economic independence in terms of its seven hundred thousand villages as distinguished from its cities and towns. The struggle for the ascendancy of civil over military power is bound to take place in India’s progress towards its democratic goal. It must be kept out of unhealthy competition with political parties and communal bodies. For these and other similar reasons, the AICC resolves to disband the existing Congress organization …” அதாவது மகாத்மா காந்தி அவர்களே தன் கைப்பட எழுதிய காங்கிரஸ் கட்சிக்கான வரைவு சட்ட திட்ட விதிகளில் அவர் பல காரணங்களுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இந்த காங்கிரஸ் அமைப்பையே கலைத்துவிடுவது என்று முடிவு செய்கிறது என்று எழுதி இருக்கிறார்.

ஆகவே, காங்கிரஸ் கட்சியிலே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியாமல் இங்கே பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது தான் தக்க ஆதாரம் என்பதை கூறி அமர்கிறேன் என்றார் ஜெயலலிதா.

TAGS: