பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், தூக்கு தண்டனை பெற்ற தேவிந்தர் பால் சிங் புல்லாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.
கருணை மனு மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதை கருத்தில் கொள்ளாமலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறு என்றும், கருணை மனு மீது முடிவெடுப்பதில் செய்யப்பட்ட கால தாமதத்தை நீதிபதிகள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ். சோதி உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புல்லாரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், அதே காரணத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் ஆபத்துள்ளது.
பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர், தருமபுரி பேரூந்து எரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மூவர் ஆகியோர் தொடர்புடைய வழக்கிலும் இந்தத் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலையில் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்றுவது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றுவதன் மூலம் 3 தமிழர்களையும் காப்பாற்ற முடியும்.
அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்யும் பட்சத்தில் அதில் யாரும் தலையிட முடியாது. எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவையை கூட்டி, தீர்மானத்தை நிறைவேற்றி பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்’’என்று கூறியுள்ளார்.