சென்னை: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலன அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளளனர் என்று கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். இதையடுத்து அவர் ஆதரவாளர்கள் சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய சசிகலா மீண்டும் கார்டனுக்குள் அனுதிக்கப்பட்டார். ஆனாலும், அவருக்கு பழையபடி பெரிய அளவில் அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் சசிகாலவின் அண்ணி இளவரசி போயஸ் கார்டனில் அதிகார மையாக வலம் வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா மீண்டும் தனது அதிகார மையத்திற்குள் வந்துவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பல அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், தொடர்ந்து பல அமைச்சர்கள் மீது புகார் வந்து கொண்டு இருப்பதால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகின்றது. அதன்படி தமிழக அமைச்சரவையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் என தெரிய வருகின்றது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையன், கோகுல இந்திரா, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றவர்கள் மீண்டும் அமைச்சர் லிஸ்ட்டில் உள்ளதாக கூறப்படுக்கின்றது. மேலும், சசிகலா ஆசி பெற்ற சிலரும் அமைச்சர் ஆகலாம் என கூறப்படுகின்றது.
தமிழக்தில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்து செயல்படும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. வரும் 20ம் தேதி முதல் பெளர்ணமி நாளான மே 24ம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்த அமைச்சர்கள் பலர் பெரும் கலக்கத்தில் உள்ளனராம்.