நக்ஸல் போராளிகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் பலி

naxal_attackஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீது மாவோயியவாத ஆயுததாரிகள் நடத்தியுள்ள தாக்குதலைக் கண்டித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், “இந்திய ஜனநாயகத்துக்கு இது ஒரு கருப்பு தினம்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது மாவோயியவாதிகள் இருநூறுக்கும் அதிகமானவர்கள் நடத்திய திடீர்த் தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் மாநிலத் தலைவர் நந்த்குமார் படேல், மாவோயியவாதிகள் எதிர்ப்பு ஆயுதக் குழுவின் தலைவர் மஹேந்திர கர்மா ஆகியோரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் சத்தீஸ்கர் சென்று தாக்குதலுக்கு இலக்கானவர்களையும் அவர்தம் உறவினர்களையும் சந்தித்துள்ளனர்.

மாநிலத் தலைநகர் ராய்பூர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சோனியா காந்தியின் புதல்வரும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி இம்மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5:30 மணியளவில் ராய்ப்பூருக்கு தெற்கே சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் தர்பா கட்டி பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

வானகங்கள் சென்ற பாதையில் மரம் வெட்டிப் போடப்பட்டிருந்ததால் வாகனங்களை நிறுத்த வேண்டி வந்தது என்றும் பின்னர் குறைந்தது ஒரு வாகனம் நிலக்கண்ணியில் சிக்கியது என்றும் பின்னர் அந்த இடத்தில் பதுங்கியிருந்த சுமார் 200 மாவோயியவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர் என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

நந்த்குமார் பட்டேல்தான் இத்தாக்குதலின் முக்கிய இலக்கென்று கருதப்படுகிறது. தாக்குதலின்போது அவரும் அவர் மகனும் ஒரு பள்ளத்தில் பதுங்கியிருந்தனர், ஆனாலும் அவர்களை மாவோயியவாதிகள் பிடித்துச் சென்றனர் என சாட்சிகள் கூறுகின்றனர்.

பின்னர் இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நந்த்குமாரின் உடல் வெட்டித் துண்டுபோடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சத்தீஸ்கரில் முன்பு உள்துறை அமைச்சராக இருந்த மஹேந்திர கர்மா சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தார். மாவோயியவாதிகளை எதிர்த்து மோதுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த சல்வா ஜுதும் என்ற ஆயுதக் குழுவை உருவாக்கியவர் இவர்.

நடுவண் அரசில் முன்பு அமைச்சராக இருந்த வித்ய சரண் ஷுக்லா உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிலருக்கு மிக மோசமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நக்ஸலைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த மாவோயியவாதிகள் ஏழை மக்களுக்கு நில உரிமையும் வேலைவாய்ப்பும் வேண்டும் எனக்கோரி ஆயுதமேந்திப் போராடுகின்றனர்.

மத்திய மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் இவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக அவ்வப்போது மோசமான தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

-BBC

TAGS: