தமிழக அரசு மீது மத்திய அரசு ஆதிக்கம்: பிரதமருக்கு, முதல்வர் ஜெ., கடிதம்

india24613aசென்னை:“என்.எல்.சி., பங்குகளின் உண்மையான மதிப்பு தெரிந்திருந்தும், அவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது, ஏமாற்றமளிப்பதாக உள்ளது. தமிழக அரசு மீது, மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் முயற்சி,’ என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதிய கடித விவரம்:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்(என்.எல்.சி.,), பங்குகளை விற்க வேண்டாம் என்று, இம்மாதம் 8ம் தேதி, நான் கடிதம் எழுதியிருந்தேன்.

அப்போதும், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடிய போது, என்.எல்.சி.,யின், ஐந்து சதவீத பங்குகளை, விற்க முடிவெடுத்திருப்பது, அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

மத்திய அரசு, தமிழகத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வதை, இது காட்டுகிறது. நான் ஜனவரி மாதத்தில் எழுதிய கடிதத்தில், என்.எல்.சி.,யில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, தீர்வு காண, இரண்டு எளிமையான வழிகளை கூறி, பங்குகளை விற்றால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தேன்.மாற்று வழிகளை ஆராயாமல், புறக்கணித்திருப்பது, மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

இந்த பங்கு விற்பனை மூலம், மத்திய அரசிற்கு, 466 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிகிறது. இது, தமிழக மக்கள் விருப்பத்திற்கு எதிரான முடிவு. பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், என்.எல்.சி., பங்குகளை விற்பனை செய்ய, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, வியப்பான விஷயம்.

லாபம் தருகின்ற, நவரத்தினா பொதுத் துறை நிறவனங்களில் ஒன்றான, என்.எல்.சி., பங்குகளின் உண்மையான மதிப்பு, மத்திய அரசுக்கு தெரியாமல் இல்லை. சூழ்நிலை குறித்து, எந்த ஆலோசனையும் செய்யாமல், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பங்கு விற்பனை தொடர்பாக, எனக்கு எழுதிய கடிதத்தில், தொழிற்சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகளுடன், ஆலோசித்து விட்டதாக, குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள், மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, போராட்டம் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின், இந்த மோசமான நடவடிக்கையால், தவிர்க்கப்பட வேண்டிய, இந்த போராட்டத்தை தமிழகம் தான் எதிர்கொள்ள வேண்டும். இது மாநிலத்தின் மின் தட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்யும். “செபி’ அமைப்பின் விதிகள், வழிகாட்டுதல்களை மட்டும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, என்.எல்.சி.,யின் பங்குகளை விற்கும் முடிவை எடுத்திருக்கக் கூடாது.

எனவே. என்.எல்.சி.,யின் பங்குகளை விற்கும் முடிவை, மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். நான் ஏற்கனவே சுட்டிக் காட்டிய, இரண்டு மாற்று வழிகளையும் கவனத்தில் கொண்டு, மத்திய அரசு, தன் முடிவை மாற்ற வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: