சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா​வில் தொடர்ந்து பயிற்சி!

india29613bசிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவில் இருந்து விரட்டியடிப்பது நாளுக்குநாள் தொடர்கிறது. ஆனாலும் அவர்களைப் பயிற்சிக்காக வரவழைப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்பை மத்திய அரசு மதிப்பதாகவே தெரியவில்லை.

கடந்த 27-ம் தேதி தமிழகம் வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தஞ்சாவூரில் இந்திய விமானப்படைத் தளத்தின் புதிய நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசினார்.அப்போது, ‘தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழகத்தில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளது’ என்றார்.

ஆனால் அதே நாளில் இலங்கையைச் சேர்ந்த இராணுவ விங் கமாண்டர் எம்.எஸ்.பண்டார திசநாயக்க, மேஜர் சி.எஸ்.ஹரிஷ்சந்திரா ஹெட்டியராச்சி ஆகியோர் பயிற்சிக்காக வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமுக்கு வரவழைக்கப்பட்டதுதான் கொடுமை.இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதிய ஜெயலலிதா, வெலிங்டனில் பயிற்சிபெறும் இரண்டு அதிகாரிகளையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெலிங்டன் பயிற்சி முகாமை முற்றுகையிட்டனர்.ஜூன் 25-ம் தேதி இராணுவ முகாமை முற்றுகையிடப் போவதாக அறிவித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, 24-ம் தேதி மதியம் குன்னூர் வந்தார்.ஆனால் அதேநாளே பலத்த பாதுகாப்புடன் மிக இரகசியமாக இலங்கை இராணுவத்தினர் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து முற்றுகைப் போராட்டம், கண்டனக் கூட்டமாக மாற்றப்பட்டது.இரு இயக்கங்களாகப் பிரிந்து சென்ற திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருஷ்ணனும் இந்தப் பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

வைகோ பேசும்போது, ”வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரி, எங்கள் தமிழ் மண்ணில் உள்ளது. 10 மாதப் பயிற்சிக்காக இங்கே வரவழைக்கப்பட்ட சிங்களவர்கள், விங் கமாண்டர் பண்டார தசநாயக்க, மேஜர் ஹரிஷ்சந்திர ஆகிய இருவரும் 29 நாள்கள் பயிற்சிக்குப் பின்னர், திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.தமிழர்களைக் கொன்றவனுக்குத் தமிழ் மண்ணில் பயிற்சி கொடுப்பதைவிடக் கேவலம் எதுவுமே இல்லை.

தமிழக முதலமைச்சர், இந்தியப் பிரதமருக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார். ‘சிங்கள இராணுவத்தினரை, தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து பயிற்சி கொடுப்பது அக்கிரமம் அல்லவா? அவர்களை உடனே வெளியேற்றுங்கள் என்றார்.தமிழகத்தின் முதலமைச்சர், கொலைகாரச் சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுக்காதே என்று கூறியதற்குப் பிறகும், தொடர்ந்து தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க உனக்கு என்ன துணிச்சல்? என்ன செய்துவிட முடியும் என்ற ஏளனமா?

சுயமரியாதையை இழந்துவிட்ட சில கைக்கூலிகள், இந்தியா பயிற்சி கொடுக்காவிட்டால், அவர்களுக்குச் சீனா பயிற்சி கொடுக்கும்’ என்கிறார்கள்.அந்தக் கீழான காரியத்தை சீனா செய்தால் செய்துவிட்டுப் போகட்டும். இந்தியா இதனைச் செய்யக் கூடாது. தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியதற்குப் பிறகு, 29 நாள்கள் கழித்து அவர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.அடுத்து ஏழு சிங்கள இராணுவத்தினரை இங்கே பயிற்சிக்கு அழைத்து வரத் திட்டம் வகுத்திருக்கிறார்கள்.

1 லட்சத்து 37 ஆயிரம் பேரைக் கொன்று குவித்த சிங்கள இராணுவ வீரர்கள், தமிழர்களின் இரத்தக் கறை படிந்த கரங்களோடு, இந்தத் தமிழ் மண்ணுக்கு வந்து பயிற்சி பெறுவதா? இராணுவத்தில் இருக்கிற எங்கள் இளைஞர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.நான் இப்படிப் பேசினால், இந்திய இராணுவத்தை எதிர்த்துப் பேசிவிட்டான் என்று உடனே என் மீது வழக்குத் தொடுப்பார்கள். பரவாயில்லை.

இங்கே மட்டும் அல்ல, இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் சிங்களவனுக்குப் பயிற்சி கொடுத்தால், இந்தியா எங்களுக்கு அந்நிய நாடு என்று நாங்கள் கருத வேண்டிய நிலை ஏற்படும்.திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்பதற்காக, இந்திய அரசை மன்னிக்க மாட்டோம்.

இதுவரை 563 தமிழக மீனவர்களைக் கொன்றுவிட்டான். சிங்களப் போர்க் கப்பல்களைக் கச்சத்தீவுக்கு அருகில் நிறுத்தியிருக்கிறான்.இன்றைக்கு அங்கே சீனர்கள் உலவுகிறார்கள், மீன்பிடிக்கிறார்கள். சீனக் கடற்படை வீரர்கள் ரோந்து வருகிறார்கள்.

இதனால், தமிழகத்துக்குத்தான் ஆபத்து.ஆகவே, தமிழகத்தின் நலன்களைக் காக்க, நாம் மிக விழிப்போடு இருக்க வேண்டும்.தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அறவழியில் பாடம் கற்பியுங்கள் என்றார்.தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதிய உடனே இது தொடர்பாக மத்திய அரசு வெலிங்டன் இராணுவ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது.

இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. யாரும் போராடவில்லை. எனவே, அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டியது இல்லை என இராணுவ அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.இதனாலே இருவருக்கும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே போராட்டம் இவ்வளவு தீவிரம் அடையும் என எதிர்பார்க்கவில்லை.கல்லூரிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் ஜூலை மாதத்தில் கல்லூரி மாணவர்கள் ஈழ ஆதரவு நிலையை மையப்படுத்திப் போராட்டம் நடத்துவார்கள் என்று உளவுத் துறை அறிக்கை குறிப்பிட்டதது.அதன் பின்னரே இலங்கை வீரர்களைத் திருப்பி அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது என்கின்றனர் மத்திய உளவுத்துறை பொலிஸார்.இனியாவது மத்திய அரசு உணருமா?

TAGS: