தமிழகத்தில் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் பக்ருதீன் சென்னையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய தீவிரவாதிகள் புத்தூரில் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் பக்ருதீனிடன் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தது தெரியவந்ததது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து தலைவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விஸ்வ இந்து பரிஷத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திங்கள்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள இந்து இயக்கத் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.