சர்வதேசமே….சர்வதேசமே………..(ச.ச.முத்து)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

உங்களிடம் எல்லாவற்றிற்கும்
ஏதேனும் ஒரு சரத்தோ அன்றி
தீர்மானமோ அதுவுமின்றேல்
வார்த்தையோ இல்லாமலா போகும்.

நாங்கள் இனப்படுகொலை என்றால்
நீங்கள் மெதுவாக அழுத்தி
போர்க்குற்றம் என்று வாசிப்பீர்கள்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று
நாங்கள் ஒன்றாக ஓங்கி குரல் தந்தால்
நல்லிணக்க ஆணைக்குழுவே போதுமென
ஏதேனும் ஒரு தடித்த புத்தகத்தை
மேற்கோள் காட்டி தடுத்துவிடுவீர்கள்.

நாங்கள் சுதந்திர தமிழீழம் என்றால்
நீங்கள் மாகாணசபைக்குள்
முடங்கி போய்விடுங்கள் என்கிறீர்கள்.

நாங்கள் விடுதலைப்போர் என்று
வேள்வி வளர்த்தால்-நீங்களோ
பயங்கரவாதம் என்று பட்டம்சூட்டி
வேருக்குள் விசம் தெளிப்பீர்கள்.

எங்கள் இனம் அழிகிறதே என்று
நாம் ஓங்கி அழுது சொன்னால்
அன்டார்டிகாவில் சுறா மீன்கள்
அழிந்து போகிறது என்று
கவலைப்பட்டு மாநாடு போடுவீர்கள்.

இவை எல்லாம் தெரிந்தும்
இன்னும் உங்கள் கதவுகளையே
தொடர்ந்து தட்டுகின்றோம்.

ஏன் தெரியுமா..
இன்னும் இங்கும் ஏதேனும்
ஒரு மூலையில் மனிதம் சாகாத
இதயத்துடன் ஒரு மனிதன்
இருப்பான் என்ற நம்பிக்கையில்தான்.

துருப்பிடித்து போன உங்கள்
மனச்சாட்சி கதவை திறந்துவர
ஏதேனும் ஒரு ஆதரவுக்கரம்
நீளமலா போய்விடும் என்ற
கடைசி துளி நம்பிக்கையுடன்தான்
எல்லாமே செய்கின்றோம்.

உங்கள் நீண்ட மாநாட்டு மண்டபங்களில்
எதிரொலிக்கும் ‘வீட்டோ’ களாலும்
கை உயர்த்தி காட்டும் எதிர் ஆதரவு
எண்ணிக்கைகளாலும் மட்டுமே
நியாயப்படுத்தபடும் மனிதத்தின்
இறுதி துடிப்பில் யாரோ ஒருவனின்
ஓங்கி ஒலிக்கும் தர்மத்தின் குரல்
எங்களுக்காக உலக அரங்கில்
நியாயம் கேட்கும் என்ற
நம்பிக்கை இன்னும் சாகாமல்
இருப்பதால்தான்
கடும் குளிருக்குள் அவர்கள்
நீண்ட தூரங்கள் நடந்ததும்
நாங்கள் தெருக்களில்
பதாகை தாங்கி நிற்பதும்.

எங்களின் நம்பிக்கை வற்றிக்கொண்டே
போகிறது  உண்மைதான் -ஆனால்
இன்னும் செத்துவிடவில்லை
வீரத்தினில் விதையாகிப்போன
எம் தேசத்துப் புதல்வர் நினைவில்
நெஞ்சுக்குள் நம்பிக்கை விளக்கேற்றி
காத்திருக்கின்றோம்-இனியும் காத்திருப்போம்.

– ச.ச.முத்து

TAGS: