பொங்கல் என்றால் தமிழருக்குப், பொங்கித் தின்னும் ஒருநாளோ?

காலைப் பனிநீர் மேலொழுகி

கன்னம் தொட்ட வேளையிலே

சாலப் பொருந்தும் பட்டுடையில்

சாந்த மாக நின்றபடி

கோலப் பொட்டு வைத்ததொரு

குட்டிப் பானை முன்னாலே

காலப் பரிதி எழும்திசையில்

கரும்பைக் கட்டிக் காத்திருப்போம்!

 

கதிரோன் சிறகை விரித்ததுமே

கரங்கள் நாங்கள் குவித்திடுவோம்

முதிரும் அந்த நாழிகையில்

முன்னால் பொங்கல் பொங்கிடுமே

அதிரும் முழக்கம் ஒலித்திடுமே

அதுவே பொங்க லோபொங்கல்

உதிரும் இனிப்புப் பொங்கலையே

உதட்டில் இட்டே சுவைத்திடுவோம்!

 

பொங்கும் திருநாள் தொடங்கிடுமே

பொங்கல் விருந்தும் தொடர்ந்திடுமே

அங்கம் உடுத்தும் தாவணியால்

அழகாய்ப் பெண்கள் சொலிப்பாரே

தங்கம் கழுத்தில் மின்னிடவே

தகைமை சார்ந்து நடப்பாரே

எங்கள் சொந்த பந்தங்கள்

எடுப்பார் முடிவைப் பெண்கேட்டே!

 

திருநாள் செழிப்பை வெளிப்படுத்த

திமிறும் காளைக் கூட்டங்கள்!

ஒருநாள் திமிரை அடக்கிடவே

ஓடி வருவார் தமிழிளையர்!

பெருநாள் பேசும் வரலாற்றில்

பெருமை மிக்க மறவர்காள்!

வருநாள் நல்ல நாள்பார்த்து

மணநாள் புகுவார் இளையர்காள்!

 

இயற்கை பொருண்மை மிகுந்திருக்கும்

இயல்பைப் போற்றும் திருநாளாம்

செயற்கை எதுவும் இல்லாத

சிறந்த தமிழர் இயல்வாழ்வாம்

முயற்சி செய்து உழைத்திடனும்

முடிவில் அறங்கள் காத்திடனும்

பயிற்சி யாலே பலம்பெறனும்

பரிவுக் கொண்டே வாழ்ந்திடனும்!

 

பொங்கல் என்றால் தமிழருக்குப்

பொங்கித் தின்னும் ஒருநாளோ?

எங்கும் இருக்கும் இறைவனையே

ஏற்றித் துதிக்கும் திருநாளோ?

பொங்கல் பின்னால் பொதிந்திருக்கும்

போற்ற நினைக்கும் வரலாறே!

எங்கள் இனத்தின் தொடர்ச்சியினை

ஏந்திப் பிடிக்கும் கொடிநாளே!

 

பொங்கல் பானை வாங்கிடுவோம்

பொதுவில் பொங்கல் வைத்திடுவோம்

பொங்க அரிசி இல்லையென்றால்

பூனைத் தூங்கும் அடுப்பிலென்போம்

எங்கோ உயரப் பறந்தாலும்

இயற்கை உழவன் இல்லையென்றால்

அங்கே கெடுமே இவ்வுலகம்

அவனை மதிக்கப் பழகிடுவோம்!