மடிமீது காதல் கனா – விஷ்ணுதாசன்
தென்றல் தாலாட்டும் சோலையில்
தேவியின் தென்றல் மடிமீது
கைவிரல் வருடும் சுகத்தில்
கண்கள்மூடி கனாக் கண்டேன்!
அடிபரந்த தென்னைமரமதில்
கொத்தாய் குலுங்கும் இளநீர்
இடிமின்னல் சூழ்ந்து மேகம்
இறங்கி கூந்தல் மோதும்!
குயிலுக்கு குரல் பயிற்சி
குமரியவள் கொடுக்க கண்டேன்
மயிலுக்கு நடனப்பயிற்சி
மங்கையும் வழங்க கண்டேன்!
நீரருவி ஓடிவந்து அவள்
திருமேனி தழுவக் கண்டேன்
தேனருவி இதழை கரு
வண்டு மோதக் கண்டேன்!
மரவுதிர் இலைகள் அனைத்தும்
ஈரவுடலில் ஆடையாக கண்டேன்
மலைப்பனி குளுமை வாட்டும்
மங்கையை அருகில் கண்டேன்!
சிற்றிடை வளையக்கண்டேன்
சிருங்கார நடனம் கண்டேன்
சிற்றிதழ் துடிக்க முத்தமிட்டேன்
சிலைதேகம் உயிர்க்க கண்டேன்
கனா மெல்லக் கலைந்ததும்
கண்விழித்து நிலவு கண்டேன்
அனல்வீசும் அழகு தெரிக்க
ஆரத்தழுவி மோகம் தீர்த்துவிட்டேன்!