மாறுபட்ட சமுதாயம் காண்போம்

மாறுபட்ட சமுதாயம் காண்போம்

விஷ்ணுதாசன்

வண்ணத்துபூச்சி சிறகு
வளையல் அணிந்திருப்பதால்
அதையும் கொடுமைசெய்தான்
வதைப்பதை நியாமென்றான் மனிதன்!

ஓநாய் இறந்தால். ஒப்பாரி
வைக்கும் ஊனக்கூட்டம்
அணில் இறந்தால் வருந்தி
அஞ்சலி செலுத்துவதில்லை!

சமுதாய முதுகில் உண்மைசாட்டையால்
அடிக்க மனதில் உறுதிவேண்டும்
காட்டில் முட்களை விலக்கி
கள்ளமிலா பூவை சூடவேண்டும்!

நிலவின் நோய்க்கு விரைந்து
மருத்துவம் செய்யவேண்டும்
வியர்க்கும் சூரியனருகில் நின்று
விசிறி கொண்டு வீசவேண்டும்

மாறுபட்ட சமுதாயம் உருவாகும்
ஏரோட்டும் பாட்டாளி உயர்வான்
தேரோட்டும் தனவான்கள் அதிகாரத்திலிருந்து
உயிரோட்டும் ஏழைக்கு விடுதலை வேண்டும்!

மேலாடை தொலைத்த சூரியனார்
மேற்கில் விழும் முன்னே மெலியர்
நியாயம் கிடைக்கப்பெற வேண்டும்!
நீதி பாரபட்சமின்றி வேண்டும்

கிளிக்கு காவல் பூனையாம்
மானுக்கு காவல் வேங்கையாம்
இந்நிலை உடன் மாறவேண்டும்
இன்னுமோர் சுதந்திரம் வேண்டும்

பொருளாதார பின்னடைவை வெல்ல வேண்டுமானால்
பொதுவுடமை தன்னலமின்றி பரவ வேண்டும்
முதலாளி தொழிலாளி நல்லிணக்கம் வேண்டும்
உழைப்பை உறிஞ்சும்
முதலைகளை வேட்டையாட வேண்டும்!