ஆசிரியத் தெய்வமே உன்றன் மலரடிப் பணிகின்றேன்

காசு கொடுத்துப் படிக்கவில்லை – நான்
காசுக் காகவும் படிக்கவில்லை
பாசத் திற்கா கவேபடித்தேன்- உன்
பாராட் டுக்கா கவேபடித்தேன்
ஆசான் உன்றன் முகம்பார்க்க- நான்
அதிகா லையிலே எழுந்திடுவேன்
கூசும் குளிரை மறந்திட்டேன்- தினம்
குளிர்ந்த பூவாய் மலர்ந்திட்டேன்!
வாடா குமரா என்றதுமே – என்
வாடி யமுகம் உடன்மலரும்
தாடா உன்றன் புத்தகத்தை – இது
தானே சிறந்த படைப்பென்பாய்க்
காடாய்க் கிடந்த இதயத்தில்- ஒரு
காடே மலராய் மாறுமன்றோ
வீடு சென்றே சேர்ந்தபின்னும் – நெஞ்சம்
வீணை நரம்பாய்த் துடிக்குமன்றோ!
கற்றல் பொருளும் தெரியாது – நீ
கற்றுக் கொடுத்தால் புரிந்துவிடும்
உற்ற நண்பன் ஒருவனைப்போல்- நீ
ஒட்டிக் கொண்டு கற்பிப்பாய்
அற்றுப் போகா உறவதுபோல் – உன்
அன்பே என்னை முன்தள்ளும்
மற்ற தெல்லாம் மறந்தாலும் – உன்
மாசில் லாத மனம்மறவேன்!
பசியில் ஒருநாள் மயங்கிவிட்டேன்- ஒரு
பள்ளிப் பாட நேரத்திலே
புசிக்க உடனே ஊட்டிவிட்டாய் – உன்
பொறுப்பில் பொறுமைக் காட்டிவிட்டாய்
வசியம் செய்யும் அன்பதனால்- உன்
மாணாக் கர்தான் பின்வருவார்
நசியும் ஒழுங்கைச் சரியாக்க- அதை
நயமாய்த் தானே செய்திடுவாய்!
எண்ணிப் பார்த்துக் கசிகின்றேன் – நீ
என்றோ புரிந்த தொண்டினையே
எண்ணில் எண்ண முடியாதே- நீ
ஏற்றி வைத்த சுடரொளியே
மண்ணில் என்ன தவம்செய்தேன் – உன்
மாண வனாக மலர்வதற்கே
விண்ணில் மேவும் தேவதைநீ- உனை
வேண்டித் தானே நலமடைந்தேன்!