யாதும் ஊரே யாவரும் கேளீர்-துரை.மாலிறையன்

யாதும் ஊரே யாவருமே

அன்புக் குரிய நம்மக்கள்

தீதும் நன்றும் பிறராலே

தீட்டித் தருதல் இலைஎன்றார்

காதல் தமிழ்பால் கொண்டவராம்

கணியன் பூங்குன் றன்னவராம்

ஆய்தல் வேண்டும் அவர் மொழியை

அறிவுள் ளவராம் வையத்தார்;

 

நலமாய் அறிவை நாட்டியவன்

நற்போர் எல்லாம் சூட்டியவன்

நிலத்தில் ஏரைப் பூட்டியவன்

நெருப்பை மூட்டிக் காட்டியவன்

கலத்தைக் கடலில் ஓட்டியவன்

காலத் தமிழன் அவனதனால்

உலகில் முதலில் தோன்றியவன்

உலகம் சொந்த ஊர் என்றான்;

 

முன்னால் பிறந்த மாந்தந்தான்

முறையாய் இனங்கள் பலவாறாய்ப்

பின்னாள் பிரிந்த மொழிபலவாய்ப்

பிரிந்து பிரிந்து வாழ்கின்றான்

எந்நாள் அதனால் யாவருமே

அன்புக் கேளிர் எனச்சொன்னான்

 

தொன்மைத் தமிழர் வரலாற்றைத்

துல்லி யமாக வரிஇரண்டில்

உண்மை உலகோர் உளமெல்லாம்

உணர்ந்து கொள்ளத் தான்சொன்னான்

நன்மை தீமை என்பதெலாம்

நமக்கு யாரும் தருவதிலை

மண்ணில் நமக்கு நாமேதான்

மல்க அமைத்துக் கொள்கின்றோம்;

 

பொதுமை பொறுமை என்பதெலாம்

பொய்யாய்ப் போன உலகத்தில்

எதுமெய் எதுபொய் தெரியாமல்

எல்லாம் மயங்கி வாழ்கின்றார்

முதுமை கொண்ட நற்றமிழின்

முறைமை அறியாச் சிறியோர்கள்

புதுமை என்னும் பெயராலே

புன்மை செய்து கெடுக்கின்றார்;

 

சுரண்டி விட்டார் தமிழ் மண்ணைச்

சுரண்டிச் சுரண்டிக் கொழுக்கின்றார்

சுரண்டு வார்கள் இன்னும்தான்

சுரணை இழந்தோம் நாம்என்றால்;

திரண்டுள் ளார்கள் நமைச்சூழ்ந்த

திருட்டுக் கூட்டம் இனித்தமிழா!

இருண்டு போகும் உன்வாழ்க்கை

இனியும் விழிக்கா திருக்கின்றாய்;

 

நந்தம் மண்ணில் வந்துபுகும்

நாய்கள் கூட நமை ஏய்க்கும்

விந்தை நந்தம் மண்ணில்தான்

வீரம் காட்டி விளையாடும்

சொந்த மண்ணில் கூடதமிழ்ச்

சொல்லை அழிக்கும் முயற்சிஎலாம்

எந்த மடையன் செய்தாலும்

எதிர்க்கா தவனோ முழுமடையன்;

 

நமக்குச் சொந்தம் தமிழ்நாடு

நம்தாய் நாடு தமிழ்நாடே

நமக்குச் சொந்தம் நம்மொழியே

நம் தாய் மொழியும் தமிழ்மொழியே

நமக்குப் பேரும் தமிழினமே

நமக்கு மற்றார் பிறஇனமே

நமக்கு வேண்டும் தமிழ்மனமே

நம்த மிழின்றேல் நாம்பிணமே!

 

கட்சி இருந்து தொலையட்டும்

காட்சி பலவும் நிலவட்டும்

பெட்புத் தமிழால் ஒன்றிணைவோம்

பிரிவி னைகள் விலகட்டும்

உட்பு குந்த தமிழாலே

ஒளிர்ந்து சேர்வோம் தமிழினமாய்

ஒப்புக் கொன்று படஎண்ணா(து)

உயர வேண்டும் மண்மேலே!

 

சாதி யாவும் விலகட்டும்

சமயம் வாழ்ந்து போகட்டும்

பேதைப் மைகள் இல்லாத

பெருமை கொண்ட இனத்தவராய்த்

தீதில் லாமல் தமிழர்கள்

தேயம் தன்னில் வாழட்டும்

வேத  னைகள் தரமுயல்வார்

விலகி நமைவிட் டோடட்டும்.

 

 

 

தமிழ்மாமணி;

-துரை.மாலிறையன்-