ஒரு கரு மைப் பொழுது.. – சிவா லெனின்

இது ஒரு

கரு மைப் பொழுது

 

வாக்குப் பெட்டிகள்

வலுவிழந்து போயின

கொள்ளைப்புறக் கதவுகள்

திறந்தே இருப்பதால்..

 

விலைப்பட்டியலோடு

மாண்புமிகுகள்

ஏலத்திற்காகக்

காத்துக்கிடப்பதால்

குப்பைகளை

மறுசுழற்சி செய்ய

நாடாளுமன்றத்தின் கதவுகள்

திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

 

விலை பேசப்பட்ட

தவளைகளின் வருகைக்காக

நாற்காலிகள்

காத்துக் கிடக்கின்றன –

தவளைகளை

வரவேற்க

எங்களின் உமிழ்நீரும்

தொடர்ந்து சேகரிக்கப்படுகிறது..

 

நம்பிக்கையோடு

விரலில் இட்ட மை

முகத்தில் பூசப்பட்டது.

 

அரசியல் கழிவுகளின்

காலடியில்

ஜனநாயகம்

மிதிபட்டுக் கிடப்பதால்

வாக்களித்த விரல்கள்

உடைத்தெறியப்பட்டன.

 

நாட்டை இருள்

சூழ்ந்து கொண்டிருக்கிறது –

வெளிச்சத்தைத்

தேட வேண்டிய அரசு

தீகுச்சிகளை

அலட்சியம் செய்கிறது.

 

மாற்றத்திற்காக

உரக்கக் கத்தியவர்களின்

நாக்குகளோ

சாலையோரம்

சிதறிக்கிடக்கின்றன

 

தடுத்த

சுவருக்குப் பின்னால்

ஒளிந்திருப்பதால்,

மக்களின் அலறலும்

மரண ஓலமும்

அவர்களின் காதுகளில்

ஒலிக்கவேயில்லை

கடைசி வரைக்கும்.