மாட்டுப் பொங்கல் – குமரன் வேலு

காடாய்க் கிடந்த விளைநிலத்தைக்

கழனி யாக்கப் பாடுபட்டு

வீடாய் எண்ணிப் படுத்துறங்கி

விடிந்தும் கூட வினையாற்றி

ஓடாய்த் தேய்ந்த உழவரெல்லாம்

உதவும் மாடு வளர்த்தாரே!

மாடாய் உழைத்த உழவரென்றும்

மாடாய் மாட்டை நினைத்ததில்லை!

 

வளரும் கன்றாய் வாங்கிவந்து

வயிறுப் புடைக்கப் புல்லையிட்டு

வளர்ந்தும் கூட மகனைப்போல்

வாஞ்சை யுடனே மார்பிலிட்டு

தளர்ந்த வயதில் தானழைக்க

தலையை ஆட்டி ஓடிவருமே

கிளர்ந்த மாட்டின் அன்புக்காய்க்

கிழவன் வாழ்வார் நூறாண்டு!

 

காளை யுடனே மகன்வளர்ந்தான்

காளை அடக்கும் கலையறிந்தான்

வேளை வந்த காலத்திலே

விரைந்தான் முரட்டுக் காளையென்றே

நாளை அவனே வீரனென்று

நாட்டு மக்கள் கூவிடுவார்!

ஆளை விரும்பும் கன்னியரும்

அவனின் வீரம் விளம்புவரே !

 

வீரம் தழுவும் விளைநிலத்தில்

விதைத்த குருதி விழுமிடத்தில்

சோரம் போகா தமிழினத்தின்

சொட்டும் மானம் வளர்ந்துநிற்கும்

பாரம் எதையும் தாங்கிநின்று

பாடு பட்டு மெய்வருத்தி

மாரில் குத்துப் பட்டநிலை

மாட்டுப் பொங்கல் காட்டிடுமே!