வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது
வாழ்வின் தத்துவம் சொல்லித் தந்தது
வாழ்வே கலையென வகுத்துச் சொன்னது
உணர்வைச் செதுக்கிடும் மகிமை வாய்ந்தது
உழைப்பே உயர்வென ஊக்கம் படைத்தது
பசியில் பகிர்ந்திட கற்றுத் தந்திடும்
பரிவே மூச்சென மலரச் செய்திடும்
இனிய சொற்களைப் பேச வைத்திடும்
இல்லமே கோயிலென உணரச் செய்திடும்
வினாக்கள் பற்பல விடைகள் கிடைத்திடும்
விதியே இன்றி வினோதம் படைத்திடும்
நிழலாய் ஒளியாய் நிலையாய் காத்திடும்
நினைந்தே நெஞ்சம் நிம்மதிப் பெற்றிடும்
கருணை உள்ளம் கண்களில் மின்னிடும்
கண்களில் கண்ணீர் சொரிந்து வடிந்திடும்
தேகம் வளர்ந்திட தேனாய் சுரந்திடும்
தேறிட மனமோ அம்மா என்றிடும்…
– சீர்காழி உ செல்வராஜு
நாகப்பட்டிணம் மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள தண்ணீர் பந்தல் சொந்த ஊர்,. 15 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணியாற்றி சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்றிருக்கிறேன். தற்சமயம் கப்பல் கட்டுமான துறையில் பொறியாளராக சிங்கப்பூரில் பணி செய்து வருகிறேன். வாசிப்பும், எழுத்தும் பொழுது போக்கு. சிங்கப்பூரின் தேசிய தமிழ் நாளிதழான தமிழ்முரசில் பல கவிதைகள் வந்துள்ளன. ஒரு கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது.