வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
நான் தொலைத்த யாவற்றையும்
கண்டு பிடித்து தரும்
கருவியாக இருக்கிறாள்…
பயணம் புறப்படும் நேரத்தில்
நான் மறந்த எல்லாவற்றையும்
மறக்காமல் எடுத்து வைக்கிறது
அனிச்சை செயலாக
அவள் கைகள்…
எனக்கு தலைக்கனம் ஏறுவதை
தலைத்துவட்டும் சில கனங்களில்
அழித்து விட்டுப்போகிறாள்…
எவ்வளவு சுவைமிகுந்த வெளி உணவுகளையும்
எளிதில் மறக்கடித்து விடுகிறாள்
வெறும் மிளகு ரசத்தில்…
குழப்பத்தில் நான் தவித்து
கேள்விக்குறியாய் நிற்கும் நேரங்களில்
அன்பில் கொஞ்சம் நிமிர்த்தி
ஆச்சர்ய குறியாக்கி விடுகிறாள்…
தனிமையில் என்னோடிருக்கவே
தவமிருக்கிறாள்..
வார விடுமுறைக்காகவே
வரம் கேட்கிறாள்…
அத்தனை அலுவலக சுமைகளும்
அசுர வேகத்தில் மறைகிறது
“சாப்ட்டீங்களா” எனக் கேட்கும்
அவள் ஒற்றை விசாரிப்பில்…
வாழ்க்கை எனும்
சதுரங்க விளையாட்டில்
எப்போதும் ராணியாகவே இருக்கிறாள்…
************** ஜின்னா **************