உத்தராகண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணியில் முன்னேற்றம் – தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எப்படியும் அடுத்த சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தகவலை மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. செங்குத்தாகவும், பக்கவாட்டிலும் துளையிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரும்பு குழாய்களும் அதில் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் உள்ள சிக்கியுள்ள தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சுரங்கப் பாதைக்கு வெளியே தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அவர்களுக்கு வேண்டிய முதல் உதவி சிகிச்சையை அளித்து, உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான சமுதாய மருத்துவக் கூடம் தயார் செய்யப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைக்குள் தேசிய மீட்புப் படை வீரர்களும் சென்றுள்ளனர்.

முன்னதாக, மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று மாலை 4 மணி அளவில் பேசிய சாலை போக்குவரத்துத் துறையின் கூடுதல் செயலாளர் (தொழில்நுட்பம்) மெஹ்மூத் அகமது, “நள்ளிரவு 12:45 மணிக்கு ஆகர் இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடத் தொடங்கினோம். 39 மீட்டர் துளையிட்டு 800 மிமீ குழாயைச் சொருகியுள்ளோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் நன்றாக முன்னேறி வருகிறோம்.

பக்கவாட்டிலும் துளையிட்டு வருகிறோம். இதில், 7.9 மீட்டர் வரை துளையிட்டுள்ளோம். எவ்வாறாயினும், சுரங்கப்பாதைக்குள் 45-50 மீட்டர்களை அடையும் வரை, அவர்களை மீட்பதற்கான சரியான காலக்கெடுவை வழங்க முடியாது. குழாய்களை சொருகுவதில் தடைகள் இல்லை என்றால் இன்றிரவு அல்லது நாளை காலை மிகப் பெரிய செய்தி வரலாம்” என்று தெரிவித்தார்.

 

 

-ht