நரம்புகள் வரம்புகள் மீறித் துடிக்கட்டும்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் 
தோன்றிட ஏதும் தடையிருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்

இடர் நீங்கவே வந்த இருள் போக்கவே 
கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன 
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா 
சில விண்மீன்கள் விழுந்தால் என்ன 

மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை 
கைவாளாய் எடுத்து இன்னல் தீர இன்னல் தீர
போராட்டம் நடத்து
கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு கல்லறைகள் அல்ல 

சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல 
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா வானம் உண்டு வெல்ல 
வண்ணச்சிறகின் முன்னே வானம் பெரிதல்ல
இதயம் துணிந்து எழுந்த பின்னாலே 

இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே 
நரம்புகள் வரம்புகள் மீறித் துடிக்கட்டும் 
விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும் 
முட்டுங்கள் திறக்கும் என்னும் புது பைபிள் கேட்கட்டும்

சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம் 
தீ வளர்த்துப் பார்ப்போம் 
விடியல் வரும் முன்னே இருள் எதற்கு கொள்வோம் 
குட்டு பட்டு குட்டு பட்டு கூட்டம் குனிந்த கதை போதும் 

பொறுமை மீறும் போது புழுவும் புலியாகும் 
தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா 
புஜத்திலே வலுத்தவர் ஒன்றாய் திரட்டுவோம் 

நிஜத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்

-பொன்.ரங்கன்

TAGS: