லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இந்த பஸ்கள் பிங்க் நிறத்தில் இருக்கும். ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருக்கும். இவற்றில் ஆண்கள் பயணம் செய்ய முடியாது. பெண்களும், குழந்தைகளும் மட்டும் பயணம் செய்யலாம்.
முதல்கட்டமாக 50 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படவுள்ளன.
மாநிலம் முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்த பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் திட்டத்துக்கு மாநில அரசு நிதியுடன் மத்திய அரசின் உதவியும் பெறப்படுகிறது.
டெல்லியில் 2012-ம் ஆண்டு மாணவி ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு தனி நிதியை உருவாக்கியது. அதில், தற்போது ரூ.1000 கோடி உள்ளது. அந்த பணத்தில் இருந்து ரூ.50 கோடியை உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கான தனி பேருந்து திட்டத்துக்காக வழங்கப்படவுள்ளது.