“ஜகாட்” க்கு அமோக வரவேற்பு! இதோ சில விமர்சனங்கள்!

jagat5-300x250நேற்று ஜகாட் திரைப்படத்தின் முன்னோட்டத்துக்குப் போயிருந்தேன். அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் ஜகாட்.

படத்தில் தமிழ்ப்பள்ளியும் அதில் பணியாற்றும் ஆசிரியர்களும் முக்கிய அங்கத்தை வகிக்கின்றனர். இளைய பிள்ளைகள் உள்ள பெற்றோர்களும் படத்தைப் பார்க்க வேண்டும்.எனக்குத் தெரிந்தவரை இந்தப் படம்தான் மலேசிய இந்தியர்களின் சொல்லப்படாத ஒரு  கதையைச் சரியாகச் சொல்லியிருக்கிறது. படத்தில் வரும் துரை என்ற மெக்சிகோ, மணியம், அவர் மகன் (ஆறாம் ஆண்டு மாணவம்) ஆகிய மூவரையும் படம் ஒரே நேரத்தில் பின்தொடர்கிறது. இசை அறுமை. பாருங்கள் என்கிறார்  வே. இளஞ்செழியன்.

சரவணன் இராமச்சந்திரன் – மலேசியத் திரைப்படங்களில் தனித்துவம் வாய்ந்தது. காதலையும் நாயகயியலிலும்(heroism) அடிமைப்பட்டுக் கிடக்கும் திரைப்படங்களுக்குச் சாட்டையடி. ஓரினத்தின் அவலத்தை எடுத்துரைக்கும் காலக்கண்ணாடி! 1990களில் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கை அத்தியாயத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் படக்குழுவையும் அதன் இயக்குநர் சஞ்சய்குமாரையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். நம்நாட்டு அரசியல் சூழலில் எல்லா விடயங்களையும் வெளிப்படையாகப் படம்போட்டுக் காட்டிவிட முடியாது.

jagat1ஆனால், இயக்குநர் பல்வேறு உத்திகளைக் கையாண்டு நம்மினத்திற்கு ஏற்பட்ட அரசியல், பொருளியல், சமூகவியல் இன்னல்களை எடுத்துரைத்திருக்கிறார். வானொலியை அதற்கு திறம்படப் பயன்படுத்தியிருக்கிறார்.

ரவ்பியா கயிறு – இடைவார் – வானொலிச் செய்தி படம் பார்க்கும்வேளை இக்காட்சி உணர்த்தும் நம்நிலை. மெக்சிகோ இன்னொரு களத்திற்கு மாறுவதற்கான கதைக்கரு. அப்போய் நம் வீட்டிலும் இருந்திருக்கிறான் என்பதைப் படம் பார்ப்பவரெல்லாம் நிச்சயமாக உணர்வர்.

ஜகாட் நம்வீட்டுக் கதை. நம்நாட்டுக் கதை! 1990களில் தோட்டப்புறத்தைவிட்டுப் புறம்போக்கு நிலங்களில் குடியமர்ந்த நம்மவர்கள் பட்ட துன்பத்தை இத்துணை அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். 90களில் வாழ்வாதாரம் இழந்த இளைஞர்கள் குண்டர்கும்பலை நாடித் தங்கள் வாழ்விழந்த கதையைத் திரைப்படத்தில் சொல்ல துணிவு வேண்டும். அத்துணிவு இப்படக்குழுவிற்கு உண்டு.

கதை, கதைக்களம், இயல்பான நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, படமாக்கல் எனப் பலநிலைகளில் இப்படம் மற்றப் படங்களுக்கு நிச்சயமாக ‘ஜகாட்’ தான். மலேசிய இந்தியர்களின் 1990களின் வரலாற்றைத் திரைப்படமாக்கியதில் இவர்கள் ‘ஜகாட்’ தான்.

jagat2என்னைக் கவர்ந்த மற்றுமொரு விடயம் இப்படத்தின் தலைப்பு ‘ஜகாட்’. காரணம் இப்படத்தில் யார்தான் ஜகாட் என்று நீங்கள்தாம் கண்டுபிடிக்க வேண்டும். அத்தனை ஜகாட்டுகள் படமுழுக்கப் பயணிக்கிறார்கள். இவர்தான் ஜகாட் என அறுதியிட்டுக் கூறமுடியாத அளவுக்குப் படம் நகர்கிறது. ‘யார் ஜகாட், கண்டுபிடியுங்கள்?’ எனப் போட்டி ஒன்றனைக்கூட நடத்தலாம். அதற்குக் காரணகாரியங்களோடு விளக்கமும் கொடுக்கலாம்.

நவின் – வல்லினம் – ஒரு கலைஞன் தன் சமூகத்தை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறான் என்பது முக்கியமானது. அதுவும் யாராக இருந்து தன் சமூகத்தைப் பார்க்கிறான் என்பதும் சமூகத்தில் எந்தத் தரப்போடு தன்னை இணைத்துக்கொள்கிறான் என்பது அவசியமானது. ‘ஜகாட்’ மலேசியத் தமிழ்ச் சமூகத்தின்  ‘லும்பன்’ குழுவின் மீது தன் கவனத்தை வைக்கிறது.

கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியச் சொல்லான Lumpenproletariat என்பதை  அறிமுகப்படுத்துகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்புடன் தொடர்பற்ற, வர்க்க உணர்வை நோக்கி நகராத உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளை ஆரம்பத்தில் அவர் அவ்வாறு அழைத்தார். ரௌடிகளும் அதில் அடக்கம்தான். இந்த ரௌடி கலாச்சாரத்தையே ‘ஜகாட்’ முன்வைத்துப்பேசுவதால் இதை முதல் மலேசிய லும்பன் திரைப்படம் எனலாம். அதாவது ஒரு திரைப்படத்தில் ரௌடிகள் வந்துபோவதும் ரௌடிகள் உருவாவதன் அரசியலைப் பேசுவதையும் இங்கு வித்தியாசம் காணவேண்டியுள்ளது.

இவ்வாறு ரௌடிகள் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களையும் அது பணம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாறும்போது தங்களுக்காக வகுக்கப்பட்ட ‘நெறி’களை எவ்வாறு மீறி அழிவுச்சக்தியாக உருமாற்றம் கொள்கிறது என்பதையும் ‘ஜகாட்’ மலேசியச்சூழலில் முதன் முதலாகப் பேசுகிறது.

jagat3பொதுவாக இலக்கியத்திலும் திரைப்படத்திலும் அவசியமில்லாத அல்லது தனித்துவம் இல்லாத கதாபாத்திரங்கள் வந்துப்போவதுண்டு. சஞ்சை இப்படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் மிக நுட்பமாக உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்குச் சிங்கை இளங்கோவன் நடிப்புப் பயிற்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது. மூர்க்கமான இளைஞன், உல்லாசத்தை மட்டுமே எதிர்ப்பார்க்கும் அவன் தோழன், தன் அடையாளத்தை தேடிக்கொண்டிருக்கும் சிறுவன் என பாத்திர வார்ப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அச்சு அசலாக 90களில் தொழிற்சாலையில் அமுக்கப்படுவதால் வீடுகளில் முழு அதிகார உணர்வுடன் உலாவும் அப்பாவையும் தன் அடையாளம் எங்குமே தெரியக்கூடாது என இருளுள் மறைந்துள்ள அம்மாவும் நிஜ வாழ்வில் பார்ப்பது போலவே வந்துபோகிறார்கள்.