யா.கோகிலா, மலேசிய சோசலிசக் கட்சி
கடந்த ஜனவரி 16, 2018, மலேசியாகினி ஒரு பெண் பத்திரிக்கையாளர் நாடாளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தப் பத்திரிக்கையாளர் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தபோது, அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாலியல் துன்புறுத்தலைச் செய்ததாக தெரிய வந்துள்ளது. இதைவிட மோசமான செய்தி என்னவெனில், அந்தப் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியரே, சம்பந்தப்பட்ட அரசியல்வாதியிடமிருந்து ஆக அண்மையச் செய்திகள் கிடைப்பதற்காக அந்தப் பாலியல் தொல்லையைப் பொறுத்துக்கொள்ள சொன்னதே ஆகும்.
இந்தச் செய்தி வெளிச்சத்திற்கு வந்தபோது, மலேசியப் பத்திரிக்கைச் சங்கத் (என்.யு.ஜே) தலைவர், முகமட் தௌஃபிக் ரசாக், மற்றவர் கண்களைப் பறிக்கும் வண்ணம் பெண் பத்திரிக்கையாளர்கள் உடையணியக் கூடாது என்றும்; அரசியல்வாதிகளிடமிருந்து செய்தி சேகரிக்க தங்கள் பெண்மையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் ஆலோசனைக் கூறியிருந்தார். அவரின் இந்தக் கூற்றைப் பெண்ணுரிமை அமைப்புகளும் பத்திரிக்கையாளர்களும் சாடியபோது, உடனடியாக மறுநாள் பாலியல் தொந்தரவு கொடுத்த தரப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு; முன்னதாக தான் வெளியிட்டது தனது சொந்தக் கருத்து என்றும் முகமட் தௌஃபிக் ரசாக் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலேயே ஒரு பெண் பத்திரிக்கையாளருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையைக் கண்டு நாம் வெட்கப்பட வேண்டும். நாம் ஒரு குற்றவாளியை, பாலியல் தொந்தரவாளனை, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோமா? இது ஒரு வருந்தத்தக்க விஷயம். ஆனால் இதையும் சிலர், ஆண்கள் பெண்களால் ஈர்க்கப்படுவது சாதாரணமான ஒன்றுதானே என நியாயப்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல் மற்ற நல்ல பண்புள்ள ஆண்களுக்கும் இழிவை ஏற்படுத்துகிறது.
இங்கு கேள்வி என்னவெனில், பதவியில் இருப்பவர்கள் பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவது இதுதான் முதல் முறையா? இல்லை.
1994-ஆம் ஆண்டு, நாட்டின் விளையாட்டு வீராங்கனையான ரபியா அப்துல் சலாம் மரணம் ஒரு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தனது பயிற்சியாளரான சி.ராமநாதனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டார் ரபியா. இந்தச் செய்தி வெளி உலகத்திற்கு வெடித்த போது, நாட்டிலுள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் அரசாங்கத்திடம் பாலியல் தொந்தரவு எதிர்ப்பு சட்டத்தை இயற்றும்படி நெருக்குதல் கொடுத்தனர். இச்செயலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் குரல் எழுப்பினர். ஆனால், அரசாங்கம் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை, ஓர் உயிர் பலியானதுதான் மிச்சம்.
2008-ம் ஆண்டு, கோலாலம்பூரிலுள்ள 5 நட்சத்திர தங்கும் விடுதியில் வேலை செய்த ஒரு பெண்ணுக்கு, அமைச்சர் டத்தோ ஜமாலுடின் ஜர்ஜிஸ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக செய்தி வெளிவந்தது. அந்தச் செய்தி அப்படியே மூடி மறைக்கப்பட்டது. பாலியல் தொந்தரவு எதிர்ப்பு சட்டமும் இயற்றப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து 2009-ல், தொழிலாளர் இலாகா தலைமை அதிகாரி, இஸ்மாயில் அப்துல் ரஹிம், பாலியல் தொந்தரவு எதிர்ப்பு சட்டம் அமலுக்கு வந்தால், வேலை இடங்கள் வெறுமையாகிவிடும் என்று கூறியுள்ளார். அவரின் கூற்றுப்படி பார்த்தால், வேலையிடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் அவர்களின் மரியாதையையும் உரிமையையும் பறிக்கும் ஒரு நடவடிக்கையாக, பதவியில் உள்ளவர்கள் கருதவில்லை; மாறாக அது மகிழ்ச்சி தரும் ஒன்றாக உள்ளது என்று அவர்கள் கருதுவதாகவே தெரிகிறது.
இதைவிட நமக்கு கோபத்தை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களான புங் மொக்தார் ராடின் (கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் முகமட் யுசோப் சயிட் (ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர்) இருவரும், பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை வைத்து, நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேலி செய்தது. இவர்களின் இந்தச் செயலை நாடாளுமன்ற சபாநாயகரோ அல்லது அவர்களின் வாக்காளர்களோக் கண்டிக்கவில்லை, தண்டிக்கவும் இல்லை. பாலியல் தொந்தரவு எதிர்ப்பு சட்டத்திற்காகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், அரசாங்கம் அதனைக் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறது.
2017-ல், பாலியல் தொந்தரவு வேறு ரூபத்தில் உருவெடுத்தது. ஷெல் பெட்ரோல் நிலையத்தில் படுதா (துடோங்) அணிந்திருந்த ஒரு பெண்ணின் விளம்பரப் பலகையில், பல ஆண்கள் அவளின் மார்புகள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கை வைத்து புகைப்படம் எடுத்து, அப்பெண்ணை மானபங்கப்படுத்தினர். இதுபோன்ற செயல்களில், ஒரு பெண்ணின் புகைப்படத்தைக்கூட அசிங்கப்படுத்தும் அளவு, மலேசியாவில் சில ஆண்களின் சிந்தனை குன்றியுள்ளது. அந்த விளம்பரப் பலகையில் இருந்த பெண், கவர்ச்சியான ஆடை கூட அணியவில்லை, படுதா போட்டிருந்தும் ஆண்களின் சிந்தனை அவளைப் பாலியல் தொந்தரவு செய்ய தூண்டியுள்ளது.
பெண்களைப் பாதுகாக்க, பாலியல் தொந்தரவு எதிர்ப்புச் சட்டம் எத்துணை முக்கியம் என்பதனை, மேலுள்ள அனைத்து சம்பவங்களும் நமக்கு தெளிவாகக் காட்டியுள்ளன. அதைவிட முக்கியம், பாலியல் தொந்தரவு என்பது ஒரு குற்றச்செயல் என்றும், அது ஒரு பெண்ணின் கெளரவத்தை மீறுகிறது என்பதனையும் ஆண்கள் உணர வேண்டும்.
இங்கு, எல்லா ஆண்களும் காமவெறியர்கள் என்று நாம் சொல்லவில்லை, ஏனெனில் சமுதாயத்திலுள்ள பெரும்பாலான ஆண்கள் பெண்களை மதிக்கின்றனர், பாலியல் குற்றச் செயலை எதிர்க்கின்றனர். ஆயினும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளிப்படையாக இந்தப் பாலியல் தொந்தரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுதான் வருகின்றனர்; மக்கள் இதையெல்லாம் பொறுத்துகொண்டு, அவர்களுக்கு வாக்களித்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். பாலியல் தொந்தரவு செய்பவர்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டும்; மக்கள் அவர்களைப் பதவி நீக்கம் செய்யக் கோர வேண்டும்.
இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன், நான் மலேசியாகினியைச் சேர்ந்த, நீண்ட முடி கொண்ட, ஓர் ஆண் பத்திரிக்கை நிருபரான ஃஜான் அஸ்லீயின் அனுபத்தைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.
ஒருமுறை, நாடாளுமன்றத்தில் ஒரு பத்திரிக்கை மாநாடு முடிந்தப்பின், தனது நண்பர்களுடன் ஃஜான் அஸ்லீ பேசிக் கொண்டிருந்திருக்கின்றார். பின்னாலிருந்து பார்க்கும்போது முடி நீண்டு, ஒரு பெண் போல தோற்றம் தந்த அவரை, ஒரு மந்திரி, பின்னாலிருந்து அவரின் கையைப் பிடித்து இழுத்து, காருக்குள் தள்ள முயற்சித்திருக்கிறார். ஃஜான் அஸ்லீ திரும்பி பார்த்தபோது, “ஓ ஆணா, நான் பெண் என நினைத்தேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதுதான் மலேசிய நாடாளுமன்றத்தில், ஒரு பெண்ணின் நிலை. பார்ப்பதற்குப் பெண்ணாக இருந்தாலே, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஒரு பெண்ணின் உடையோ நடவடிக்கையோ இதற்கு காரணமல்ல, மாறாக, இம்மாதிரியான பாலியல் தொந்தரவிற்குத் தண்டனை இல்லை என்ற சிந்தனைதான் இச்செயல்கள் தொடரக் காரணமாக உள்ளது.
இந்நிலையை நாம் மாற்ற வேண்டும். பாலியல் தொந்தரவைக் கற்பழிப்புக்கு நிகராகக் கண்டித்து, தண்டனைக் கொடுக்க வேண்டும். இந்தப் பாலியல் தொந்தரவுக்கு எதிர்ப்பாக சட்டம் இயற்ற பெண்கள் அமைப்புகள் மட்டுமல்லாமல், அனைவரும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
இறுதியாக, பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் நபர்களைக் குற்றம் சொல்லும் போக்கை நிறுத்தி, அந்தக் குற்றத்தைச் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும்.
பாலியல் தொந்தரவு எதிர்ப்புச் சட்டத்தை, உடனடியாக இயற்ற வேண்டும்.