தாய்மொழிப்பள்ளிகள் ஒருமைப்பாட்டிற்குத் தடங்களாக இருக்கின்றன என்ற பிரதமர் மகாதிரின் கருத்துகள் போன்றவைதான் இன ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக அமையும். தாய்மொழிக்கல்வியின் தனிச்சிறப்பு ஐயத்திற்கு அப்பாற்பட்டது என்ற கண்டனத்தை சமூக அமைப்புகள் முன்வைத்துள்ளன.
ஐபிபிஎன் (IPPN) என்ற என்றழைக்கப்படும் 12 அரசுசார்பற்ற பல்லின அமைப்புகளின் தேசிய கல்வி சீரமைப்பு முனைப்பு இந்நாட்டில் நடைமுறையிலிருக்கும் முறைப்படுத்தப்பட்ட பல்வகைப் பள்ளிகள் திட்டம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற அதன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.
பன்மை தன்மையுடைய சமுதாயத்திற்கு தாய்மொழிக்கல்வி முற்றிலும் பயனளிக்கக்கூடியது, என்பதோடு அதன் விளைவுடமைக்கு மாற்று சான்றுகள் தேவையில்லை.
பல்வகைப்பள்ளிகள் திட்டம் மலேசியாவில் தேசிய ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று சமீபத்தில் தாய்லாந்துக்கு சென்றிருந்த துன் டாக்டர் மகாதிர் விடுத்திருந்த அறிக்கைக்கு மறுமொழியாக ஐபிபிஎன் மேற்கூறிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்று அது தனது பத்திரிக்கை செய்தியில் அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் வெளியிடப்பட்ட மேல் விபரங்கள் வருமாறு:
இந்நாட்டில் பல்லினச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இது வரலாற்று முன்னேற்றத்தின் விளைவாக அயல்நாட்டு மக்கள் குடியேறுதல் சார்ந்த படிப்படியான வளர்ச்சி சம்பந்தப்பட்டதாகும். அதன் விளைவாக, சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு இனமும் அதன் தனித்தன்மையை வெளிப்படுத்துகிற ஒரு சமூக அமைப்பை உருவாக்கின. அந்த அமைப்பு பலவகைப்பட்ட பண்பாடு, மொழிப் பயன்பாடு மற்றும் சமூகக் கட்டமைப்பு, தாய்மொழிக்கல்வி மீதான வலுவான நம்பிக்கை உட்பட, போன்றவற்றால் பிரதிநிதிக்கப்படுகிறது.
மலேசியாவில் ஒரு பெரிய சுதேசிகளற்ற மக்கள் தொகை இருக்கிறது. தாய்மொழிக்கல்வி அவ்வினங்களின் கலாச்சார பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு மட்டுமே சேவையாற்றும் நோக்கத்தைக் கொண்டதல்ல, அதற்கு நடைமுறைக்குரிய பொருளாதாரப் பயனும் இருக்கிறது.
இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இருநூறு ஆண்டுகால வரலாறு இருக்கும் வேளையில், சீனமொழிக்கல்வி பள்ளிகள் தொடங்கிய காலத்திலிருந்து அவற்றின் 200 ஆண்டுகால மைல்கல்லை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டில் அடையும். இந்நாட்டில் தாய்மொழிக்கல்வியின் விடாப்பிடியான வீரியம் பல்வேறு இனத்தினர் அதன் சிறப்பில் கொண்டிருக்கும் வலுவான நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது.
உண்மையில், இந்நாட்டில் தாய்மொழிக்கல்வி பிரிட்டீஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து இருந்து வருகிறது. அதற்கான முறையான அங்கீகாரம் நாட்டின் சுதந்திரத்திற்கு வகைசெய்த கூட்டரசு அரசமைப்புச் சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
தாய்மொழிக்கல்வி அளித்துள்ள சிறப்பான பங்களிப்பு அது உற்பத்தி செய்துள்ள பன்மை தன்மையுடைய மனித மற்றும் சமூக மூலதனங்களில் காண முடிகிறது.
அது சிறிய, நடுத்தர தொழில்கள் சார்ந்த தொழில் முனைவோர் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போட்டியிடும் தன்மையை வளர்க்க உதவுவதற்கு உயர்ந்த தரமுடைய தொழிலாளர்கள் மற்றும் தொழிலியர்கள் ஆகியோரை பெருமளவில் உற்பத்தி செய்வதில் தாய்மொழிக்கல்வி என்றுமே தடங்கலாக இருந்ததில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
தாய்மொழிக்கல்வியின் பங்களிப்பை மட்டம் தட்டுவதற்காக எழுப்பப்படும் எந்தக் கூச்சலும் மிகத் தவறான வழிகாட்டலாகும். இது போன்ற தூரநோக்கமற்ற மற்றும் பிரபுத்துவ மனப்பாங்கு நாட்டிலுள்ள பல்லினங்களுக்கிடையே தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு பெரும் தடங்கலாக அமைகிறது.
அபரீத வளர்ச்சி என்று பெருமைப்படும் நாம் அதை தாய்மொழிக்கல்வி கொண்ட சூழழில்தான் பெற்றோம் என்பதை ஏற்றுக்கொள்ள ஏன் தயங்க வேண்டும்?
ஓரினத்திற்காக அமைப்பட்டுள்ள மாரா போன்ற கல்வி அமைப்புகளும் இனவாதம் கொண்ட அரசியல் மற்றும் அரசமைப்பும்தான் ஒருமைப்பாட்டை ஒதுக்கி வேற்றுமையை வளர்க்கின்றன என்பதை மறைத்து ஆறு ஆண்டுகள் மட்டுமே கொண்ட தாய்மொழிக் கல்வி மீது குறை சொல்வது ஏற்புடையதல்ல.
உலகம் முழுவதிலும் கல்வித் துறையிலுள்ள கற்றறிந்தவர்களும் கல்விமான்களும் தாய்மொழிக்கல்வின் முக்கியத்துவத்தைப் பொதுவாக அங்கீகரிக்கின்றனர். அதாவது, குழந்தைகளுக்கு மிகப் பழக்கமான மொழியில் போதித்தல் குழந்தைகளின் கற்றலில் மிக நல்ல விளைவுகளை அளிக்கின்றன.
மாறாக, குழந்தைகளுக்கு அவர்களுக்கு பழக்கமற்ற மொழியில் அவர்கள் கல்வியில் உருப்பெற்று வளர்கிற காலத்தில் போதிப்பது அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஆகியவற்றின்மீது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவ்விளைவு ஓரங்கட்டப்பட்ட மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கொடூரமானதாக இருக்கும்.
யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி மேற்பார்வை அறிக்கையில் (2016), குழந்தைகள் கல்வியில் உருப்பெற்று வளர்கிற காலத்தில் அவர்களுக்குத் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவதைச் சுட்டிக் காட்டியுள்ளது. கல்வி கேள்விகளால் பெற்ற அறிவில் இடைவெளி இருப்பதைத் தவிர்ப்பதற்கு குழந்தைகள் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகாலத்திற்கு தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் மலேசியாவின் கடந்த காலக் கொள்கை மலேசிய மாணவர்களின் சாதனை பிசாவில் (PISA) வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது. அவ்வாறே, அக்கொள்கை மலேசிய மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் ஆதிக்கம் பெறுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேற்கண்ட கொள்கை விளைவித்த குறைபாடுகள் குறித்து சிந்திக்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. .
ஐபிபிஎன் கூட்டமைப்பின் தலைவராக டோங் ஜோங் இயக்கத்தின் தான் யூ சின் அவர்களும் அதன் துணைத் தலைவராக வழக்கறிஞர் கா. ஆறுமுகம் உள்ளனர்.
Nalla , Arumayana karutthu.